நடிகை சஞ்சனா கல்ராணி மருத்துவமனையில் திடீர் அனுமதி


நடிகை சஞ்சனா கல்ராணி மருத்துவமனையில் திடீர் அனுமதி
x
தினத்தந்தி 25 Aug 2021 7:50 PM GMT (Updated: 2021-08-26T01:20:01+05:30)

போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியான நிலையில் நடிகை சஞ்சனா நேற்று திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடல் நலக்குறைவால் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக என அவரது தாய் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

கன்னட திரையுலகில் பிரபல நடிகைகளாக இருந்து வருபவர்கள் சஞ்சனா கல்ராணி மற்றும் ராகிணி திவேதி. இவர்கள் 2 பேரும் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும், போதைப்பொருட்கள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார், நடிகைகள் சஞ்சனா, ராகிணியை கைது செய்து சிறையில் அடைத்திருந்தார்கள். தற்போது 2 பேரும் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து விட்டனர்.

இதற்கிடையில், நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக, அவர்களது தலைமுடி தடய அறிவியல் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தடய அறிவியல் பரிசோதனையில் நடிகைகள் சஞ்சனா, ராகிணி போதைப்பொருள் பயன்படுத்தி இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக தெரியவந்தது. இது போதைப்பொருள் வழக்கில் நடிகைகள் 2 பேருக்கும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், நடிகை சஞ்சனா பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று திடீரென்று அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி அவரது தாய் ரேஷ்மா கல்ராணி நிருபர்களிடம் கூறுகையில், எனது மகள் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் எந்த தவறும் செய்யவில்லை. எல்லா பிரச்சினைகளுக்கும் கடவுள் இருக்கிறார். பழைய சம்பவங்களை நினைத்து பார்க்க விரும்பவில்லை. அதனை மறந்து புதிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார், என்றார்.

இதற்கிடையில், போதைப்பொருள் பயன்படுத்தி இருப்பது குறித்து தடய அறிவியல் அறிக்கையில் உறுதி செய்யப்பட்டு இருப்பது குறித்து நடிகை சஞ்சனா கூறுகையில், "அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது, தடய அறிவியல் அறிக்கை பற்றி எனக்கு எந்த தகவலும் வரவில்லை. இந்த விவகாரம் குறித்து அதிகம் பேச விரும்பவில்லை, " என்றார்.

Next Story