"சிக்கன் செட்டிநாடு,ப்ரோக்கோலி சூப் "- வைரலான இந்திய கிரிக்கெட் அணியின் உணவு பட்டியல்


சிக்கன் செட்டிநாடு,ப்ரோக்கோலி சூப் - வைரலான இந்திய கிரிக்கெட் அணியின் உணவு பட்டியல்
x
தினத்தந்தி 27 Dec 2021 3:50 PM GMT (Updated: 2021-12-27T21:20:53+05:30)

இந்திய அணி வீரர்களுக்கு இன்று மதியம் தயாராக இருந்த உணவு பட்டியல் குறித்த அட்டவணை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தென்ஆப்பிரிக்கா,

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் செஞ்சூரியனில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் ‘டாஸ்’ வென்ற  இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

‘பாக்சிங் டே’ என்று அழைக்கப்படும் இந்த டெஸ்டில் இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில்  முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 272 ரன்கள் எடுத்துள்ளது. லோகேஷ் ராகுல் 122 ரன்களுடனும் (248 பந்து, 17 பவுண்டரி, ஒரு சிக்சர்), ரஹானே 40 ரன்களுடனும் (81 பந்து, 8 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.  

இன்று 2-வது நாள் ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்க இருந்தது. ஆனால், மழை காரணமாக ஆட்டம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் மழை தொடர்ந்து பெய்த காரணத்தால் 2-வது நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்திய அணி வீரர்களுக்கு இன்று மதியம் தயாராக  இருந்த உணவு பட்டியல் குறித்த அட்டவணை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்திய நேரப்படி இன்று மதியம் 3.00 மணிக்கு வீரர்களுக்கான உணவு இடைவேளை நேரம் வந்தது. அப்போது இந்திய அணியின் ஓய்வு அறையில்  இந்திய அணியினருக்காக வைக்கப்பட்டு இருந்த உணவு பலகையை மைதானத்தில் இருந்த ரசிகர் ஒருவர் புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவிட்டார்.

அந்த உணவு பலகையில் சிக்கன் செட்டிநாடு , ப்ரோக்கோலி சூப் , வெஜிடபிள் கடாய்,  வெவ்வேறு டிக்கா  வகைகள் போன்ற உணவு வகைகள் இடம்பெற்று இருந்தன.

Next Story