வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 217-1


வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 217-1
x
தினத்தந்தி 11 March 2022 10:38 PM GMT (Updated: 2022-03-12T04:08:23+05:30)

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து தனது இரண்டவது இன்னிங்சில் 217 ரன்கள் எடுத்துள்ளது.

அண்டிகுவா,

இங்கிலாந்து அணி , வெஸ்ட்  இண்டீசுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அதன்படி இரு அணிகளும் மோதிய டி20 போட்டியில் 3-2 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது.

இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 8-ம் தேதி தொடங்கியது.  டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு உட்பட்டது என்பதால் இந்த தொடர் இரு அணிகளுக்கும் முக்கியமானதாகும்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்கள்  விரைவாக ஆட்டமிழந்தாலும் இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டா சிறப்பாக விளையாடி சதமடித்தார். 140 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். இதையடுத்து இங்கிலாந்து அணி  தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 311 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, வெஸ்ட்  இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 157.3 ஓவர்களில் 375 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக போனர் 123 ரன்கள் குவித்தார். இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது இரண்டாம் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் அலெக்ஸ் லீஸ் மற்றும் சக் ஹுரூலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்.

அலெக்ஸ் 6 ரன்னில் வெளியேறினார். ஆனால், சக் ஹுரூலியுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஜோ ரூட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சக் ஹூரூலி சதம் விளாசினார். ஜோ ரூட் அரை சதம் கடந்தார்.

4-ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் சக் ஹூரூலி 117 ரன்களுடனும், ஜோ ரூட் 84 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீசை விட இங்கிலாந்து 1532 ரன்கள் முன்னிலையில் உள்ளது. ஆட்டத்தில் இன்னும் ஒரே நாள் மட்டுமே எஞ்சியுள்ளதால் இந்த போட்டி டிராவில் முடியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story