வெகுவாக குறைந்த தொலைக்காட்சி பார்வையாளர்கள் எண்ணிக்கை? சென்னை- மும்பை அணிகளின் தோல்விதான் காரணமா?


Image Courtesy : Mumbai Indians Twitter
x
Image Courtesy : Mumbai Indians Twitter
தினத்தந்தி 8 April 2022 11:56 AM GMT (Updated: 8 April 2022 11:56 AM GMT)

ஐபிஎல் தொடரை தொலைக்காட்சியில் பார்ப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

மும்பை,

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கடந்த மாதம் 26 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான மெகா ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் நடந்து முடிந்தது. கடந்த வருடம் இருந்த 8 அணிகள் போக லக்னோ மற்றும் குஜராத் அணிகள் இந்த முறை புதிதாக தொடரில் இணைந்துள்ளன.

இந்த தொடர் தொடங்கி தற்போது ஏறக்குறைய 2 வாரங்கள் முடிந்துவிட்டன. இந்த நிலையில் இந்த தொடரை தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்களில் பார்ப்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட வெகுவாக குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு முதல் வாரத்தை ஒப்பிடுகையில் பார்வையாளர்களின் எண்ணிக்கை 14 சதவீதம் குறைந்துள்ளதாக ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.இது கடந்த ஆண்டு முதல் வாரத்தில் இருந்த 3.75 டிவிஆர்-யில் இருந்து 2.52 டிவிஆர்- ஆக  குறைந்துள்ளது.

தற்போது வரை நடந்துள்ள போட்டிகளில் லக்னோ , ராஜஸ்தான் , குஜராத் ஆகிய அணிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 14 முறை நடந்துள்ள ஐபிஎல் தொடரில் 9 முறை கோப்பைகளை வென்றுள்ள சென்னை மற்றும் மும்பை அணிகள் இது வரை இந்த தொடரில் ஒரு வெற்றியை கூட பெறவில்லை.

சாம்பியன் அணிகளின் தொடர் தோல்விகளால் ரசிகர்களின் எண்னிக்கை குறைந்துள்ளதா என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது.

Next Story