தூத்துக்குடி மாவட்டத்தில் ஏ.டி.எம்.எந்திரங்களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் அவதி ரூ.500 நோட்டுகளை கண்ணில் பார்க்க முடியவில்லை என புகார்


தூத்துக்குடி மாவட்டத்தில் ஏ.டி.எம்.எந்திரங்களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் அவதி ரூ.500 நோட்டுகளை கண்ணில் பார்க்க முடியவில்லை என புகார்
x
தினத்தந்தி 13 Dec 2016 8:00 PM GMT (Updated: 2016-12-13T17:49:01+05:30)

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பெரும்பாலான ஏ.டி.எம்.எந்திரங்களில் பணம் இல்லாததால், அனைத்து தரப்பினரும் கடும் அவதிக்கு உள்ளாகினர். ரூ.500 நோட்டுகளை கண்ணில் பார்க்க முடியவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பெரும்பாலான ஏ.டி.எம்.எந்திரங்களில் பணம் இல்லாததால், அனைத்து தரப்பினரும் கடும் அவதிக்கு உள்ளாகினர். ரூ.500 நோட்டுகளை கண்ணில் பார்க்க முடியவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

பணத்தட்டுப்பாடு

மத்திய அரசு ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை திரும்ப பெற்றது முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் பணப்புழக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டது. வங்கிகளிலும், ஏ.டி.எம். எந்திரங்களிலும் பலமணி நேரம் காத்திருந்தாலும், பெரும்பாலானோர் பணம் இல்லாமல் வெறும் கையுடன் திரும்பும் நிலை நீடித்து வருகிறது.

ரூ.2 ஆயிரம் நோட்டுகள்

புதிதாக ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.500 நோட்டுக்களை அரசு வெளியிட்டது. இதில், ரூ.2 ஆயிரம் நோட்டுக்கள் மட்டும் ஏ.டி.எம். எந்திரங்களில் கிடைத்து வருகிறது. குறிப்பாக ஒரு தனியார் வங்கி மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட சில வங்கிகளின் ஒன்றிரண்டு ஏ.டி.எம். எந்திரங்களில் மட்டுமே ரூ.2 ஆயிரம் நோட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த ரூபாய் நோட்டுக்களும் ஏ.டி.எம். எந்திரங்களில் வைத்த சிறிது நேரத்திலேயே காலியாகி விடுகின்றன. இந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் பொதுமக்கள் அல்லாடி வருகின்றனர்.

ரூ.500 நோட்டுகள் எங்கே?

கடந்த வாரம் ஒரு தனியார் வங்கியிலும், 2 தேசிய மயமாக்கப்பட்ட வங்கியிலும் ரூ.500 நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தன. மிக குறைந்த எண்ணிக்கையில் வைக்கப்பட்ட அந்த ரூபாய் நோட்டுகளாலும் பிரச்சினை தீரவில்லை. கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் எந்த வங்கியிலும், ஏ.டி.எம்.எந்திரத்திலும் ரூ.500 நோட்டுகளை காணமுடியவில்லை. இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

நேற்று மீலாதுநபி விடுமுறை தினத்தில் பெரும்பாலான ஏ.டி.எம்.எந்திரங்கள் பூட்டிக் கிடந்தன. திறந்திருந்த ஒன்றிரண்டு ஏ.டி.எம்.களிலும் குறைந்த அளவே பணம் வைக்கப்பட்டு இருந்தன. இதனால், அதிகாலையில் இருந்தே அந்த ஏ.டி.எம்.களும் வெறிச் சோடிக் கிடந்தன.

திருச்செந்தூரில் அவதி

ஆன்மீக சுற்றுலா தலமான திருச்செந்தூரில் 3 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் இருந்தபோதிலும் பெரும்பாலான ஏ.டி.எம்.எந்திரங்கள் செயல்பாட்டுக்கு வரவில்லை. 2 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், ஏ.டி.எம்.களிலும் குறைந்த அளவே பணப்பட்டுவாடா நடப்பதால், திருச்செந்தூர் மற்றும் சுற்றுலா பயணிகள், சுற்றுவட்டார மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

நேற்று திருச்செந்தூர், குரும்பூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், ஆத்தூர், வீரபாண்டியன்பட்டினம் சுற்றுவட்டாரத்திலுள்ள அனைத்து ஏ.டி.எம். எந்திரங்களும் பணம் இல்லாமல் பூட்டிக் கிடந்தன. இதனால் அனைத்து தரப்பு மக்களும் கடும் அதிருப்திக்கு உள்ளாகினர்.

அதிகாரிகள் கவனத்திற்கு...

இதேநிலை தான், மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஊர்களில் இருந்தது. இதனால், அன்றாட அடிப்படை தேவைகளுக்கு கூட வங்கியில் உள்ள பணத்தை எடுக்க முடியாமல் அனைத்து தரப்பு மக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கிகளிலும், ஏ.டி.எம். எந்திரங்களிலும் போதிய பணம் பட்டுவாடா செய்வதற்கு சம்மந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story