கடலூரில், கடல் உள்வாங்கியது பொதுமக்கள் அச்சம்


கடலூரில், கடல் உள்வாங்கியது பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 13 Dec 2016 10:45 PM GMT (Updated: 13 Dec 2016 2:16 PM GMT)

கடலூரில், கடல் உள்வாங்கியது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். கடல் சீற்றம் தென்வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு வார்தா என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த வார்தா புயல் நேற்று முன்தினம்

கடலூர்,

கடலூரில், கடல் உள்வாங்கியது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

கடல் சீற்றம்

தென்வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு வார்தா என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த வார்தா புயல் நேற்று முன்தினம் சென்னை அருகே கரையை கடந்தது. இதையொட்டி கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. ஆனால் கடலோர மாவட்டமான கடலூரில் சாரல் மழை மட்டுமே பெய்தது. இரவு மட்டும் மிதமான மழை பெய்தது.

ஆனால் கடல் சீற்றமாக இருந்தது. அலைகள் ஆக்ரோஷமாக சீறி எழுந்தன. இதன் காரணமாக கடல் மட்டம் 1 மீட்டர் உயர்ந்தது. ராட்சத அலைகள் 2 மீட்டர் உயரத்துக்கு எழுந்ததால் மீனவர்கள் தொடர்ந்து மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் தங்கள் படகுகளை துறைமுகத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். சிறிய வகை படகுகளை மீனவர்கள் தங்கள் பகுதியில் உள்ள கடற்கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர்.

உள்வாங்கியது

நேற்று காலை கடல் அலைகளின் வேகம் குறைந்தது. இதற்கிடையில் கடலூர் தேவனாம்பட்டினத்தில் கடல் திடீரென உள்வாங்கியது. 2 மீட்டர் தூரத்துக்கு கடல் நீர் உள்வாங்கியதால் கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும் கடற்கரையோரம் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை செய்தனர். அதையும் மீறி ஒரு சிலர் கடல் நீரில் குளித்து மகிழ்ந்தனர். கடற்கரையோரம் ஒதுங்கி கிடந்த கிளிஞ்சல்களை சிறுவர்கள் எடுத்து சென்றனர்.

நேற்று கடல் சீற்றம் இல்லாததால் மீனவர்கள் கடந்த ஒரு வாரத்துக்கு பிறகு மீண்டும் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். கடலூர் துறைமுகத்தில் இருந்து விசை மற்றும் பைபர் படகுகளில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களும் முகத்துவாரம் வழியாக கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தொடங்கினர். இதனால் கடந்த ஒரு வாரமாக வெறிச்சோடி கிடந்த துறைமுக பகுதி மீண்டும் களை கட்ட தொடங்கி இருக்கிறது.

பரங்கிப்பேட்டை

பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் கடற்கரையில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. கடல் சீற்றம் காரணமாக பரங்கிப்பேட்டை கடலோரப் பகுதியை சேர்ந்த அன்னங்கோவில் முடசல்ஒடை, எம்.ஜி.ஆர். திட்டு, முழுக்குத்துறை, பில்லுமேடு, பட்டறடி, சின்னவாய்க்கால் மற்றும் சின்னூர், புதுப்பேட்டை, புதுக்குப்பம், வேளங்கிராயன்பேட்டை, சாமியார்பேட்டை, குமாரபேட்டை, மடவாப்பள்ளம் உள்ளிட்ட 50–க்கும் மேற்பட்ட கடலோர கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க நேற்று கடலுக்கு செல்லவில்லை. இதன் காரணமாக மீனவர்கள், தங்களது படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்திருந்தனர்.


Next Story