ஈரோடு அருகே ஆக்கிரமிப்பு அகற்ற முடிவு வீடுகள் கட்ட மாற்று இடம் கேட்டு தாசில்தாரிடம் கிராம மக்கள் மனு


ஈரோடு அருகே ஆக்கிரமிப்பு அகற்ற முடிவு வீடுகள் கட்ட மாற்று இடம் கேட்டு தாசில்தாரிடம் கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 13 Dec 2016 10:30 PM GMT (Updated: 13 Dec 2016 7:16 PM GMT)

ஈரோடு அருகே ஆக்கிரமிப்பு அகற்ற முடிவு செய்யப்பட்டதால் வீடுகள் கட்ட மாற்று இடம் வழங்கக்கோரி தாசில்தார் வன்னியசெல்வத்திடம் கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். நோட்டீசு வினியோகம் ஈரோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கதிரம்பட்டி, வெள்ளப்பாறை, மணல்மேடு, ப

ஈரோடு,

ஈரோடு அருகே ஆக்கிரமிப்பு அகற்ற முடிவு செய்யப்பட்டதால் வீடுகள் கட்ட மாற்று இடம் வழங்கக்கோரி தாசில்தார் வன்னியசெல்வத்திடம் கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

நோட்டீசு வினியோகம்

ஈரோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கதிரம்பட்டி, வெள்ளப்பாறை, மணல்மேடு, பகுதிகளில் ஓடை புறம்போக்கு நிலத்தில் 173 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் ஓடையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

இதையடுத்து ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் உத்தரவின்பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் கதிரம்பட்டி, வெள்ளப்பாறை, மணல்மேடு பகுதியில் ஓடையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இதுதொடர்பாக வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று ஆக்கிரமிப்பில் உள்ள பொதுமக்களுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் நோட்டீசு கொடுத்தனர். மேலும், இன்று (புதன்கிழமை) வீடுகளை இடிக்க முடிவு செய்யப்பட்டது.

மாற்று இடம்

இந்தநிலையில் கதிரம்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் ஈரோடு தாலுகா அலுவலகத்துக்கு நேற்று காலை வந்தனர். பின்னர் தாசில்தார் வன்னியசெல்வம் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் தங்களது வீடுகளை காலி செய்ய கால அவகாசம் வேண்டும் என்றும், வீடுகள் கட்ட மாற்று இடம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து ஈரோடு தாசில்தார் வன்னியசெல்வம் கூறும்போது, ‘‘ஈரோடு அருகே கதிரம்பட்டியில் ஓடை புறம்போக்கு நிலத்தில் 173 வீடுகள் உள்ளன. ஓடை புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். அதன்படி 160 பேர் மாற்று இடம் பெறுவதற்கு தகுதி உடையவர்கள். அவர்களிடம் இருந்து கோரிக்கை மனு பெற்று உள்ளோம். மேலும், அவர்களுக்கு ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை காலி செய்ய 3 நாட்கள் காலஅவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. அதன்பின்னர் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.’’, என்றார்.

இதையொட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரவிக்குமார், அருள் ஆகியோர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story