சேடபட்டி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


சேடபட்டி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 13 Dec 2016 11:00 PM GMT (Updated: 2016-12-14T01:12:37+05:30)

பேரையூர், சேடபட்டி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். குடிநீர் பிரச்சினை

பேரையூர்,

சேடபட்டி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடிநீர் பிரச்சினை

பேரையூர் தாலுகா, சேடபட்டி ஊராட்சி ஒன்றியம், சின்னக்கட்டளை கிராமத்தில் கிழக்குத்தெருவில் வசிக்கும் மக்கள் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக குடிநீர் கிடைக்காமல் மிகுந்த தவிப்புக்குள்ளாகி வருகின்றனர். இது சம்பந்தமாக ஊராட்சி ஒன்றிய ஆணையாளருக்கு பல முறை மனு கொடுத்தும், ஊராட்சி மன்றத்திற்கு தெரியப்படுத்தியும், இது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

அப்பகுதி மக்கள் தள்ளுவண்டியை வாடகைக்கு எடுத்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று குடிநீர் கொண்டு வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் பெரும்பாலும் விவசாயக்கூலி வேலைக்கு சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் குடிநீருக்காக நீண்டதூரம் அவர்கள் சென்று வருவதால் கூலி வேலைக்குகூட சரியாக செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பகுதி விவசாயிகள் குடிக்க தண்ணீர் இல்லாமலும், விவசாயத்தையும் கவனிக்க முடியாமலும் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை அப்பகுதி மக்கள் உசிலம்பட்டி, பேரையூர் மெயின் சாலையில் திடீரென காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

உறுதி

தகவல் அறிந்த சேடபட்டி போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலர் மணிகண்டன் உள்ளிட்டோர் அங்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 2 தினங்களில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதி அளித்தனர்.

அதன் பேரில் பொதுமக்கள் தங்களின் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story