தஞ்சை மார்க்கெட்டுக்கு செவ்வந்திப்பூக்கள் வரத்து அதிகரிப்பு விலையும் குறைந்தது


தஞ்சை மார்க்கெட்டுக்கு செவ்வந்திப்பூக்கள் வரத்து அதிகரிப்பு விலையும் குறைந்தது
x
தினத்தந்தி 13 Dec 2016 10:45 PM GMT (Updated: 13 Dec 2016 8:52 PM GMT)

தஞ்சை மார்க்கெட்டுக்கு செவ்வந்திப்பூக்கள் வரத்து அதிகரிப்பு விலையும் குறைந்தது

தஞ்சாவூர்,

தஞ்சை மார்க்கெட்டுக்கு செவ்வந்திப்பூக்கள் வரத்து அதிகமாக இருந்தது. இதனால் விலையும் குறைந்தது.

செவ்வந்தி பூக்கள்

தஞ்சை பூ மார்க்கெட்டிற்கு ஓசூர், ராயக்கோட்டை, சேலம், நிலக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படும். இதே போல் தஞ்சையில் இருந்து மன்னார்குடி, பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், வேதாரண்யம் உள்ளிட்ட இடங்களுக்கு பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும்.

தற்போது செவ்வந்தி மற்றும், காட்டுமல்லி பூக்கள் சீசன் ஆகும். இதனால் இந்த வகை பூக்கள் வரத்து அதிகமாக உள்ளது. தஞ்சை மார்க்கெட்டிற்கு ஓசூர், ராயக்கோட்டை பகுதிகளில் இருந்து தற்போது செவ்வந்தி பூக்கள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இதனால் செல்வந்திப்பூக்கள் விலையும் தற்போது குறைவாக காணப்படுகிறது. நேற்று 1 கிலோ செவ்வந்திப்பூ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது.

வரத்து அதிகரிப்பு

வழக்கமாக இந்த காலக்கட்டத்தில் செவ்வந்திப்பூக்கள் கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படும். ஆனால் தற்போது வரத்து அதிகமாக இருப்பதால் விலை குறைந்து காணப்படுகிறது. அதுவும் நேற்று தஞ்சை மார்க்கெட்டிற்கு செவ்வந்திப்பூகள் அதிகமாக வந்தது. வார்தா புயல் காரணமாக சென்னையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அங்கு செவ்வந்திப்பூகள் எடுத்துச்செல்லப்படவில்லை. இதனால் சென்னைக்கு கொண்டு செல்லப்படும் பூக்கள் தஞ்சை உள்ளிட்ட மார்க்கெட்டிற்கு அதிக அளவில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதே போல் வாசனை இல்லாத பூ என கூறப்படும் காட்டுமல்லி சீசன் தற்போது என்றாலும் அதன் விலை அதிகமாக காணப்படுகிறது. வழக்கமாக இந்த வகைப்பூ தற்போது ரூ.50 முதல் ரூ.100 வரை தான் விற்பனை செய்யப்படும். ஆனால் தற்போது ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு காரணம் மல்லிகைப்பூ வரத்து குறைவாக இருப்பதாலும் விலை அதிகமாக காணப்படுவதாலும் தான். மல்லிகைப்பூ தற்போது கிலோ ரூ.400 முதல் ரூ.600 வரை விற்பனை செய்யப்படுகிறது.

பூக்கள் விலை

தஞ்சை மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் பூக்களின் விலை வருமாறு:-

மல்லிகை கிலோ ரூ.400 முதல் ரூ.600 வரை. செவ்வந்தி ரூ.30 முதல் ரூ.40 வரை. அரளிப்பூ ரூ.100 முதல் ரூ.150 வரை. காட்டு மல்லி ரூ.300. கேந்தி ரூ.30 முதல் 40 வரை. கனகாம்பரம் ரூ.400.

இது குறித்து பூ வியாபாரி சூசைஅடைக்கலராஜ் கூறுகையில், “தற்போது செவ்வந்திப்பூ வரத்து அதிகமாக இருப்பதால் விலை குறைவாக உள்ளது. மல்லிகைப்பூ இந்த காலக்கட்டத்தில் கிலோ ரூ.1000-த்துக்கு மேல் விற்பனை செய்யப்படும். தற்போது மழை இல்லாமல் வெயில் காணப்படுவதால் மல்லிகைப்பூ வரத்து இருப்பதால் கிலோ ரூ.400 முதல் ரூ.600 வரை விற்பனை செய்யப்படுகிறது. சென்னைக்கு கொண்டு செல்லப்படும் செவ்வந்திப்பூக்கள், புயல் மழை காரணமாக அங்கு எடுத்துச்செல்லப்படவில்லை. இதனால் தஞ்சைக்கு அதிக அளவில் செவ்வந்திப்பூக்கள் கொண்டுவரப்பட்டன. செவ்வந்திப்பூக்கள் விலை குறைவாக இருந்தால் விற்பனையும் அதிகமாகஇருந்தது”என்றார்.

Next Story