குரும்பூர் அருகே கோவிலில் கோபுர கலசங்கள் கொள்ளை உண்டியலை உடைக்க முடியாததால் பணம் தப்பியது


குரும்பூர் அருகே கோவிலில் கோபுர கலசங்கள் கொள்ளை உண்டியலை உடைக்க முடியாததால் பணம் தப்பியது
x
தினத்தந்தி 14 Dec 2016 9:00 PM GMT (Updated: 14 Dec 2016 1:15 PM GMT)

குரும்பூர் அருகே கோவிலில் கோபுர கலசங்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். உண்டியலை உடைக்க முடியாததால் அதில் இருந்த பணம் தப்பியது.

தென்திருப்பேரை,

குரும்பூர் அருகே கோவிலில் கோபுர கலசங்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். உண்டியலை உடைக்க முடியாததால் அதில் இருந்த பணம் தப்பியது.

கோவிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள்


தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள பணிக்கநாடார்குடியிருப்பு கிராமத்தில் பாதக்கரை சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் இதே பகுதியை சேர்ந்த ராஜகோபால், பூசாரியாக உள்ளார். இவர், கடந்த 12–ந் தேதி இரவில் வழக்கம்போல் கோவிலில் பூஜைகள் முடிந்ததும் கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.

அன்று நள்ளிரவில் கோவிலுக்கு கொள்ளையடிப்பதற்காக வந்தவர்கள், கோவில் காம்பவுண்டு சுவரை தாண்டி குதித்து உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் கோவிலில் இருந்த பெரிய இரும்பு உண்டியலை உடைக்க முயன்றுள்ளனர். உண்டியலை உடைக்க முடியததால், அதில் இருந்த பணம் தப்பியது.

கலசங்கள் கொள்ளை


பின்னர் அங்கு இருந்த ஏணியின் மூலம் கோவில் கோபுரத்தின் உச்சிக்கு சென்ற கொள்ளையர்கள், அங்கு மும்மூர்த்தி சன்னதியில் இருந்த 3 கலசங்களையும், சுடலைமாடசாமி சன்னதியில் இருந்த 2 கலசங்களையும், பட்டாணி சன்னதியில் இருந்த ஒரு கலசத்தையும் கொள்ளையடித்துள்ளனர். மொத்தம் 6 கலசங்களை கொள்ளையடித்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். ஒரு கலசம் மட்டும் தப்பியது.

நேற்று முன்தினம் காலையில் கோவிலில் பூஜை செய்வதற்காக பூசாரி ராஜகோபால் சென்றார். அப்போது கோவில் கோபுரத்தில் உள்ள கலசங்கள் கொள்ளை போனதையும், உண்டியலை உடைக்க முயற்சி நடந்ததையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் குரும்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து போலீசார் அங்கு சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

கண்காணிப்பு கேமராவில் பதிவு

கோவில் வளாகத்தில் இணையதள இணைப்புடன் கூடிய கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. அதில் சம்பவத்தன்று பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர். அப்போது கோவில் வளாகத்தில் 2 மர்ம நபர்கள் நுழைந்து உண்டியலை உடைக்க முயன்றதும், கோவில் கோபுரத்தில் இருந்த கலசங்களை திருடி சென்றதும் பதிவாகி இருந்தது. கொள்ளையர்களின் முகமும் தெளிவாக பதிவாகி இருந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் கோபுர கலசங்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த கோவிலில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறையும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறையும் கோபுர கலசங்கள் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story