தடை நீங்கும் என்ற நம்பிக்கையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி


தடை நீங்கும் என்ற நம்பிக்கையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 14 Dec 2016 10:30 PM GMT (Updated: 2016-12-15T01:52:21+05:30)

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டாக உள்ள ஜல்லிக்கட்டுக்கு விதித்துள்ள தடை நீங்கும் என்ற நம்பிக்கையில் சிவகங்கை மாவட்டத்தில் காளைகளுக்கு உரிமையாளர்கள் பயிற்சியளித்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீரத்தை வெளிக்காட்டும் வகையிலும், பாரம்பரியமாக உள்ள வீர விளையாட்டாகவும் உள்ளது ஜல்லிக்கட்டு. தமிழகத்தில் பழங்காலத்தில் இருந்தே ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போ

திருப்பத்தூர்,

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டாக உள்ள ஜல்லிக்கட்டுக்கு விதித்துள்ள தடை நீங்கும் என்ற நம்பிக்கையில் சிவகங்கை மாவட்டத்தில் காளைகளுக்கு உரிமையாளர்கள் பயிற்சியளித்து வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு

தமிழர்களின் வீரத்தை வெளிக்காட்டும் வகையிலும், பாரம்பரியமாக உள்ள வீர விளையாட்டாகவும் உள்ளது ஜல்லிக்கட்டு. தமிழகத்தில் பழங்காலத்தில் இருந்தே ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெற்று வந்தன. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது இந்த ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக இந்த ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பிரபலமாக நடைபெறும். இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. இதனால் கடந்த 2 பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை நீக்கக்கோரி பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தும் இன்னும் தடை நீக்கப்படவில்லை. இதுதொடர்பாக ஏராளமானோர் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

பயிற்சி

இந்த முறையாவது ஜல்லிக்கட்டு தடை நீங்கும் என்ற நம்பிக்கையில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் காத்திருக்கும் நிலையில், பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாத காலம் மட்டுமே உள்ளது. இதனால் இவ்வாண்டு எப்படியாவது இந்த விளையாட்டிற்கு விதிக்கப்பட்ட தடை நீங்கி, பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டி நடைபெறும் என்ற நம்பிக்கையில், தற்போது மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்கள், தங்களது காளைகளுக்கு தீவிரமாக பயிற்சி அளித்து வருகின்றனர். இதனையொட்டி தங்களது காளைகளுக்கு கொம்பு சீவி விடுதல், மண்ணை முட்டும் பயிற்சி, வீரர்கள் பிடிக்க வந்தால் அவர்களை எப்படி சமாளிப்பது உள்ளிட்ட பயிற்சிகளை காளைகளுக்கு அளித்து வருகின்றனர்.

பாதுகாக்க வேண்டும்

இதுகுறித்து திருப்பத்தூரை அடுத்த மாங்குடி கிராமத்தை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர் முத்து என்பவர் கூறியதாவது:- ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் குறிப்பாக தென்மாவட்டங்களில் உள்ள அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிராவயல்புதூர், கண்டுப்பட்டி, அரளிப்பாறை ஆகிய பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியிலும் எங்களது காளைகள் கலந்துகொண்டு வெற்றி பெற்றது. இவ்வாறு அந்த காளை வெற்றியுடன் திரும்பி எங்களது வீட்டிற்கு வரும் போது, அந்த காளைக்கு வீட்டில் உள்ள பெண்களால் ஆரத்தி எடுக்கப்பட்டு பச்சரிசியுடன் வெல்லம் கலந்து அதை வைத்து வரவேற்பு அளிக்கப்படும். பின்னர் மறுநாள் அந்த காளையின் உடல் களைப்பை போக்கும் வகையில் காளையை குளிக்க செய்து வயல்வெளியில் விடப்படும். இவ்வாறு எங்களது காளைகளை வீட்டில் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவும், அவைகளுக்கு பெயர் வைத்தும் பராமரித்து வருகிறோம். அதேபோல் எங்களது கிராமத்திலோ அல்லது உறவினர்கள் இல்லத்தில் ஏதேனும் துக்க நிகழ்ச்சி நடைபெற்றாலும் அந்த சமயத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவிற்கு எங்களது காளைகளை அழைத்து செல்லமாட்டோம்.

மேலும் காளைகளுக்கு ஆண்டுதோறும் கொம்பு சீவுதல், மண்ணை முட்டும் பயிற்சி, நீச்சல் பயிற்சி, கீழ்பாய்ச்சல் உள்ளிட்ட பயிற்சிகள் இன்று வரை அளிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த வீர விளையாட்டான ஜல்லிகட்டு இவ்வாண்டு தமிழர் திருநாளான பொங்கல் நாள் முதல் எந்தவித தடையும் இல்லாமல் நடைபெறுவதற்கு மத்திய-மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் தங்களுடைய வாதங்களை முன் வைத்து தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டை அழியாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நாளுக்கு ரூ.400 செலவு

இதபோல் திருப்பத்தூர் அருகே உள்ள காரையூர் கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு காளையின் உரிமையாளர் சதீஷ் என்பவர் கூறியதாவது:- எனது காளை மதுரை, திருச்சி, புதுக்கோட்டை சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றி பெற்று ஏராளமான பரிசுகளுடன் வந்துள்ளது. இறுதியாக கலந்துகொண்ட ஒரு ஜல்லிக்கட்டு போட்டியில் கூட வெற்றிபெற்று பரிசை தன்வசப்படுத்தியது. அந்த பரிசை இன்று வரை நினைவு பரிசாக பராமரித்து வருகிறோம். எனது காளைக்கு பாசிப்பயறு, கொண்டைக்கடலை, உளுந்து, கோதுமை போன்ற தானியங்களை மாவு போன்று அரைத்து நாள் ஒன்றிக்கு 4 முறை உணவாக வழங்கி வருகிறோம். மேலும் மேய்ச்சலுக்கும் அனுப்பப்படுகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு இந்த காளைக்கு ரூ.400 முதல் 500 வரை செலவு செய்யப்பட்டு வருகிறது.

மழை பெய்யாத காரணம்

சிவகங்கை மாவட்டத்தில் ஏறத்தாழ ஆயிரக்கணக்கான ஜல்லிக்கட்டு காளைகள் இருந்தன. கடந்த சில ஆண்டுகளாக இந்த போட்டிக்கு தடை நீடித்து வந்ததால் சில காளைகளின் உரிமையாளர்கள் அதை சந்தை மற்றும் அடிமாட்டு விலைக்கு விற்று விட்டனர். இன்னும் சில கிராமங்களில் உரிமையாளர்கள் மட்டுமே எப்படியாவது இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடந்து விடும் என்ற நம்பிக்கையில் இன்று வரை அவற்றை பராமரித்து வருகின்றனர். முந்தைய காலத்தில் இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி பராம்பரியமாக தொன்றுதொட்டு நடைபெற்று வந்ததால், மாதம் மும்மாரி மழை நாடெங்கும் பெய்து விவசாயம் செழித்து மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுக்கு தடை இருந்து வருவதால் பருவமழை பொய்த்து விவசாயம் முடங்கியதாகவே நாங்கள் கருதுகிறோம். எனவே வருகிற பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நடைபெறும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். 

Next Story