வங்கியில் பணம் வழங்கப்படாததால் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


வங்கியில் பணம் வழங்கப்படாததால் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 14 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-15T02:35:37+05:30)

வங்கியில் பணம் வழங்கப்படாததால் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

ஒரத்தநாடு,

வங்கியில் பணம் வழங்கப்படாததை கண்டித்து பாப்பாநாட்டில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தஞ்சை- பட்டுக்கோட்டை சாலையில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பணம் வழங்கப்படவில்லை

கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திரமோடி கடந்த மாதம் அறிவித்தார். மேலும் இதற்கு பதிலாக புதிதாக 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இருப்பினும் புதிய ரூபாய் நோட்டுகள் கிடைப்பதில் தொடர்ந்து தட்டுப்பாடு இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

தஞ்சை மாவட்டம் பாப்பாநாட்டில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணம் எடுக்க நேற்று காலை வாடிக்கையாளர்கள் திரளானோர் வங்கிக்கு சென்றனர். ஆனால் வங்கியில் போதுமான அளவு பணம் இல்லாததால் பொதுமக்களுக்கு பணம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதனால் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் வங்கியில் இருந்து பணம் வழங்காததை கண்டித்து தஞ்சை- பட்டுக்கோட்டை சாலையில் உள்ள பாப்பாநாடு பஸ் நிறுத்தம் அருகே சாலையின் குறுக்கே அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அரசியல் கட்சி பிரமுகர்களும் பங்கேற்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு சென்ற ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன், பாப்பாநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் வங்கி அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் முதல் நடவடிக்கையாக வங்கியில் உள்ள பணத்தை வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதாகவும், மேலும் தட்டுப்பாடு இல்லாமல் பொதுமக்களுக்கு பணம் வழங்க தேவையான நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் தஞ்சை- பட்டுக்கோட்டை சாலையில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story