ஓசூர் அருகே பயங்கரம்: நிலத்தகராறில் தொழில் அதிபர் வெட்டிக்கொலை 2 பேர் போலீசில் சரண்


ஓசூர் அருகே பயங்கரம்: நிலத்தகராறில் தொழில் அதிபர் வெட்டிக்கொலை 2 பேர் போலீசில் சரண்
x
தினத்தந்தி 14 Dec 2016 11:00 PM GMT (Updated: 14 Dec 2016 9:06 PM GMT)

ஓசூர் அருகே பயங்கரம்: நிலத்தகராறில் தொழில் அதிபர் வெட்டிக்கொலை 2 பேர் போலீசில் சரண்

ராயக்கோட்டை,

ஓசூர் அருகே நிலத்தகராறில் தொழில் அதிபர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேர் போலீசில் சரண் அடைந்துள்ளனர்.

இந்த பயங்கர கொலை பற்றிய விவரம் வருமாறு:-

தொழில் அதிபர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தளி சாலையில் வசித்து வந்தவர் முனிராஜ் (வயது 60). இவரது சொந்த ஊர் கெலமங்கலம் அருகே பைரமங்கலம் பக்கமுள்ள காருகொண்டப்பள்ளி கிராமம் ஆகும். உத்தனப்பள்ளி அருகே பென்னிக்கல்லில் சொந்தமாக கல்குவாரி வைத்திருந்தார். இவருக்கும், உப்பரத்தமண்டரப்பள்ளியைச் சேர்ந்த நாகராஜ், சீனிவாசன் ஆகியோருக்கும் இடையே நிலப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், முனிராஜ் நேற்று காலை பென்னிக்கல் பகுதியில் உள்ள தனது கல்குவாரிக்கு சென்றார். பின்னர், அவர் தனது அலுவலகத்தில் உள்ள பாத்ரூமில் குளிப்பதற்காக சென்றார். அப்போது அங்கு நாகராஜ், சீனிவாசன் ஆகிய 2 பேரும் வீச்சரிவாளுடன் வந்தனர்.

வெட்டிக்கொலை

இதையடுத்து அவர்கள் முனிராஜ் இருந்த அறைக்குள் நுழைந்து, திடீரென்று அவரை சரமாரியாக வீச்சரிவாளால் வெட்டினர். இதில் முனிராஜிக்கு தலை, கழுத்து, மார்பு உள்பட உடல் முழுவதும் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அதன்பின்னர் நாகராஜ், சீனிவாசன் ஆகிய 2 பேரும் அறையின் கதவை பூட்டி விட்டு சாவி மற்றும் வீச்சரிவாளுடன் நேராக உத்தனப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு சென்றனர்.

அப்போது, அங்கிருந்த போலீசாரிடம், தொழில் அதிபர் முனிராஜை வெட்டி கொலை செய்துவிட்டதாக தெரிவித்து நாகராஜ், சீனிவாசன் ஆகிய 2 பேரும் சரண் அடைந்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், உடனடியாக சம்பந்தப்பட்ட கல்குவாரிக்கு விரைந்து சென்றனர். அங்கு படுகொலை செய்யப்பட்டு கிடந்த முனிராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

தி.மு.க.வை சேர்ந்த முனிராஜ், கடந்த 1996-2001 -ம் ஆண்டு வரையில் பைரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வந்தார். அதன்பிறகு 2001-2006-ம் ஆண்டு வரையில் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம் போடிச்சிப்பள்ளி 5-வது வார்டு கவுன்சிலராக இருந்து வந்தார்.

தற்போது நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடிவு செய்து, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ரத்தினகிரி பகுதிக்கு விண்ணப்பித்து இருந்தார். இந்த நிலையில் தான் நில பிரச்சினையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story