திருச்சி தொழிலாளி துபாயில் ‘திடீர்’ சாவு: சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் விமானத்தில் வந்த உடலை ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தியதால் பரபரப்பு


திருச்சி தொழிலாளி துபாயில் ‘திடீர்’ சாவு: சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் விமானத்தில் வந்த உடலை ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 14 Dec 2016 11:00 PM GMT (Updated: 2016-12-15T02:37:37+05:30)

திருச்சி தொழிலாளி துபாயில் ‘திடீர்’ சாவு: சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் விமானத்தில் வந்த உடலை ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தியதால் பரபரப்பு

செம்பட்டு,

திருச்சி தொழிலாளி துபாயில் திடீரென இறந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர். விமானத்தில் வந்த உடலை ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வெல்டர் தொழிலாளி

திருச்சியை அடுத்த துவாக்குடி வாழவந்தான்கோட்டையில் ஸ்டார்நகரை சேர்ந்தவர் சுதாகர் (வயது 33). இவரது மனைவி விமலாதேவி. இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். வெல்டர் தொழிலாளியான சுதாகர் கடந்த செப்டம்பர் மாதம் துபாய்க்கு முகவர் ஒருவர் மூலமாக வேலைக்கு சென்றார். அங்கு அவருக்கு வேலை பிடிக்காமல் இருந்துள்ளார். அவர் ஊருக்கு திரும்ப ஏற்பாடு செய்யும்படி முகவரிடம் கூறியுள்ளார். அவரும் சுதாகரை விமானத்தில் அனுப்ப ஏற்பாடு செய்தார். ஆனால் சுதாகர் புறப்பட்டு வரவில்லை

இதற்கிடையில் சுதாகர் திரும்பி வருவது குறித்து வாழவந்தான்கோட்டையில் உள்ள விமலாதேவியின் குடும்பத்தினரிடம் அங்குள்ள ஒப்பந்ததாரர் தெரிவித்தார். அவரை வரவேற்பதற்காக திருச்சி விமானநிலையத்தில் மனைவி விமலாதேவியும், அவரது குடும்பத்தினரும் காத்திருந்தனர். ஆனால் சுதாகர் வரவில்லை. அதன்பிறகு துபாயில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு விசாரித்த போது அவர் வரவில்லை என தெரிந்தது.

திடீர் சாவு

இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் விமலாதேவியின் சித்தப்பாவிற்கு வாட்ஸ்-அப்பில் ஒரு வீடியோ வந்தது. அதில் சுதாகர் கை, கால் கட்டப்பட்ட நிலையில் உணவு கொடுப்பது போல இருந்தது. இதனால் விமலாதேவி குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். கடந்த 5-ந்தேதி திருச்சி மாவட்ட கலெக்டரிடம் இது தொடர்பாக விமலாதேவி ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அதில் ‘தனது கணவர் சுதாகரை கட்டி வைத்து சித்ரவதை செய்வது போல உள்ளது. அவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என தெரியவில்லை. தனது கணவர் மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் துபாயில் இருந்து விமலாதேவியின் குடும்பத்தினரிடம் செல்போனில் பேசிய ஒருவர், சுதாகர் மாரடைப்பால் திடீரென இறந்து விட்டதாகவும், அவரது உடல் விமானத்தில் அனுப்பி வைக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இதைதொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு திருச்சி விமானநிலையத்திற்கு விமலாதேவியின் குடும்பத்தினர் சென்றனர். துபாயில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமனத்தில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் சுதாகரின் உடல் வந்தது.

சாவில் சந்தேகம்

விமானநிலையத்தில் சுதாகரின் உடலை உறவினர்கள் பெற்று ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றினர். அப்போது சுதாகரின் நெற்றியில் காயம் ஏற்பட்டிருந்தது. இறப்பு சான்றிதழில் மாரடைப்பால் மரணமடைந்ததாக எழுதப்பட்டிருந்தது. இதனால் அவரது சாவில் சந்தேகமடைந்தனர். சுதாகரை அடித்து கொலை செய்திருக்கலாம் என கருதினர்.

இதையடுத்து ஆம்புலன்ஸ் வேனில் உடலை ஏற்றிக்கொண்டு அருகில் உள்ள விமானநிலைய போலீஸ் நிலையம் சென்றனர். ஆம்புலன்ஸ் வேனை வெளியே நிறுத்தி விட்டு இறந்த சுதாகரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போலீஸ் நிலையம் உள்ளே சென்றனர். அங்கு இருந்த போலீசாரிடம் நிலைமையை எடுத்துக்கூறி சுதாகரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும், அப்போது தான் உடலை எடுத்து செல்வோம். அதுவரை இங்கிருந்து செல்லமாட்டோம் எனக்கூறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரேத பரிசோதனை

இது குறித்து தகவல் அறிந்ததும் விமானநிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் நிக்சன், ஜென்னீஸ் இளங்கோ ஆகியோர் விரைந்து வந்தனர். துவாக்குடிக்கு உடலை கொண்டு சென்று போலீசில் புகார் கொடுக்க அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து போலீஸ் நிலையத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீஸ் நிலையம் முன்பு ஆம்புலன்ஸ் வேனில் சுதாகரின் உடல் இருந்ததால் நேரம், நேரம் செல்ல பரபரப்பானது.

இதையடுத்து போலீசார் உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசி அடுத்த கட்ட நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்தனர். அதன்பின் சுதாகரின் உடலை திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் இது குறித்து துவாக்குடி போலீசார் ஒரு வழக்குப்பதிவு செய்ய போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதைதொடர்ந்து நேற்று காலை 10 மணி அளவில் சுதாகர் உடல் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இன்று பிரேத பரிசோதனை

துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையை மருத்துவமனை அதிகாரிகளிடம் கொடுக்க தாமதமானது. இதனால் நேற்று பிரேத பரிசோதனை நடைபெறவில்லை. இன்று (வியாழக்கிழமை) பிரேத பரிசோதனை நடைபெறும். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் தான் சுதாகர் எப்படி இறந்தார்? என தெரியவரும் போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையில் சுதாகரின் சாவில் சந்தேகம் குறித்து அவரது உறவினர் ஒருவர் கூறுகையில், “சுதாகரை அடித்து கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். அவரது உடல் அங்கு பிரேத பரிசோதனை நடந்துள்ளது. ஆனால் அதன் அறிக்கை எங்களுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை” என்றார். திருச்சி வெல்டர் தொழிலாளி துபாயில் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story