மின் வயர்கள் அறுந்து தொங்குவதால் 2 நாட்களாக இருளில் மூழ்கிக் கிடக்கும் வட சென்னை தண்ணீர் இன்றி பொதுமக்கள் கடும் அவதி


மின் வயர்கள் அறுந்து தொங்குவதால் 2 நாட்களாக இருளில் மூழ்கிக் கிடக்கும் வட சென்னை தண்ணீர் இன்றி பொதுமக்கள் கடும் அவதி
x
தினத்தந்தி 14 Dec 2016 10:30 PM GMT (Updated: 14 Dec 2016 10:15 PM GMT)

மின் வயர்கள் அறுந்து தொங்குவதால் வட சென்னை பகுதி 2 நாட்களாக இருளில் மூழ்கிக்கிடக்கிறது. வட சென்னை ‘வார்தா’ புயலால் வட சென்னை பகுதி மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. சுழன்று அடித்த காற்றின் வேகத்தால் ஏராளமான மரங்கள் மட்டுமின்றி, மின் கம்பங்களும் சாலையில் ச

சென்னை,

மின் வயர்கள் அறுந்து தொங்குவதால் வட சென்னை பகுதி 2 நாட்களாக இருளில் மூழ்கிக்கிடக்கிறது.

வட சென்னை

‘வார்தா’ புயலால் வட சென்னை பகுதி மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. சுழன்று அடித்த காற்றின் வேகத்தால் ஏராளமான மரங்கள் மட்டுமின்றி, மின் கம்பங்களும் சாலையில் சாய்ந்து விழுந்தன. மின் வயர்கள் அறுந்து தொங்கின.

கொடுங்கையூர், சோலையம்மன் கோவில், நாராயணசாமி தெரு, காந்திநகர், காமராஜர் சாலை, பார்வதிநகர், கண்ணதாசன்நகர், யூனியன் கார்பைடு காலனி, முத்தமிழ்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் வயர்கள் அறுந்து தொங்குகின்றன.

இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக மின்சாரம் நிறுத்தப்பட்டு வட சென்னை பகுதி இருளில் மூழ்கி கிடக்கிறது. 2 நாட்களாக சாலைகளிலும், தெருக்களிலும் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற மாநகராட்சி ஊழியர்கள் யாரும் வராததால் மக்களே முன்வந்து சாலையில் விழுந்து கிடக்கும் மரங்களை வெட்டியும், கிளைகளை சாலையோரத்தில் தூக்கிப்போட்டும் வருகின்றனர்.

அடிபம்பு முன்பு வரிசை

மின்சாரம் இல்லாததால் மக்கள் குடிநீருக்கு அல்லாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தெருக்களில் உள்ள, பல நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருந்த அடிபம்புகள் தான் அவர்களுக்கு தற்போது கை கொடுத்து வருகிறது.

இதனால் தெருக்களில் உள்ள அடிபம்புகள் முன்பு கூட்டம் அலைமோதுகிறது. குடங்களிலும், கேன்களிலும் அவர்கள் தண்ணீரை பிடித்து செல்லும் காட்சிகளை பார்க்க முடிகிறது. கூட்டம் நெரிசல் அதிகமாக இருப்பதால் ஒரு குடம் தண்ணீர் பிடிக்கவே ½ மணிநேரத்திற்கு மேல் ஆகி விடுகிறது.

இதனால் தண்ணீரை தேடி மக்கள் காலி குடங்களுடன் அலையும் காட்சிகளை பார்க்க முடிகிறது. தனியார் லாரிகள் மூலம் தண்ணீர் ஒரு குடம் ரூ.5–க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மனிதாபிமானத்துடன்....

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘இந்த புயலின் பாதிப்பு வட சென்னை பகுதிக்கு தான் அதிகமாக இருந்தது. மரங்கள் சாய்ந்ததால் மேலே சென்ற மின் வயர்களும் அறுந்து தொங்கிவிட்டது. 2 நாட்கள் ஆகியும் மின் வயர்களை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு குடம் தண்ணீருக்காக நாங்கள் பல கிலோமீட்டர் தாண்டி செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். மாநகராட்சி ஊழியர்களும், மின்சார ஊழியர்களும் மனிதாபிமான நோக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தனர்.


Next Story