வெள்ளியணை அருகே ராட்சத லாரி தடுப்புச்சுவர் மீது ஏறி சாலையின் மறுபகுதிக்கு சென்றது சாலையில் கிரானைட் கற்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு


வெள்ளியணை அருகே ராட்சத லாரி தடுப்புச்சுவர் மீது ஏறி சாலையின் மறுபகுதிக்கு சென்றது சாலையில் கிரானைட் கற்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 15 Dec 2016 11:00 PM GMT (Updated: 2016-12-16T03:15:22+05:30)

வெள்ளியணை அருகே ராட்சத லாரி தடுப்புச்சுவர் மீது ஏறி சாலையின் மறுபகுதிக்கு சென்றது சாலையில் கிரானைட் கற்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

வெள்ளியணை,

வெள்ளியணை அருகே ராட்சத லாரி தடுப்புச்சுவர் மீது ஏறி சாலையின் மறுபகுதிக்கு சென்றது.சாலையில் கிரானைட் கற்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராட்சத லாரி

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதியில் இருந்து பெரிய அளவிலான கிரானைட் கற்களை ஏற்றி கொண்டு ராட்சத லாரி ஒன்று திண்டுக்கல்லை நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று அதிகாலை கரூர்- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளியணை அருகே குள்ளம்பட்டி பகுதியில் லாரி சென்றது.

அப்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென்று தடுப்புச்சுவர் மீது ஏறி சாலையின் மறுபகுதிக்கு சென்றது. அப்போது லாரியில் இருந்த 20-க்கும் மேற்பட்ட கிரானைட் கற்கள் சாலையில் சரிந்து விழுந்தன.

போக்குவரத்து பாதிப்பு

மறுபகுதிக்கு சென்ற லாரி சாலையை விட்டு கீழிறங்கி சில மீட்டர் தூரத்திற்கு அப்பால் சென்றது. இந்நிலையில் லாரி டிரைவர், லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி சென்றுவிட்டார். சாலையில் விழுந்து கிடந்த கிரானைட் கற்களால் போக்குவரத்து தடைப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளியணை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும், நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசாரும் அங்கு வந்தனர். இதைத்தொடர்ந்து போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.

இதையடுத்து பொக்ளின் எந்திரம் அங்கு வரவழைக்கப்பட்டு சாலையில் கிடந்த கிரானைட் கற்கள் அப்புறப்படுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து சீரடைந்தது. இந்த விபத்தால் கரூர்- திண்டுக்கல் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story