கொள்ளிடம் அருகே பள்ளியின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து மாணவன் படுகாயம் பொதுமக்கள்– மாணவர்கள் சாலை மறியல்


கொள்ளிடம் அருகே பள்ளியின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து மாணவன் படுகாயம் பொதுமக்கள்– மாணவர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 15 Dec 2016 10:14 PM GMT (Updated: 2016-12-16T03:43:55+05:30)

கொள்ளிடம் அருகே பள்ளியின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து மாணவன் படுகாயம் அடைந்தான். இதனால் பொது மக்கள், பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாணவன் படுகாயம் நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே குன்னம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம்

கொள்ளிடம் அருகே பள்ளியின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து மாணவன் படுகாயம் அடைந்தான். இதனால் பொது மக்கள், பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மாணவன் படுகாயம்

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே குன்னம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் 45 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இந்த பள்ளி கட்டிடத்தில் குன்னம் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த குணசேகரன் மகன் சக்திபாலன் (வயது 10) என்பவன் 5–ம் வகுப்பு படித்து வந்தான். இவன் நேற்று வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்துவதை கவனித்துக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து சக்திபாலன் தலையில் விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த சக்திபாலன் மயங்கி விழுந்தான். உடனே அவனை சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் பழமையான பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டக்கோரி, குன்னம் கிராம பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் 100–க்கும் மேற்பட்டோர் குன்னம் என்ற இடத்தில் புத்தூர்– பெரம்பூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

தகவல் அறித்த சீர்காழி பாரதி எம்.எல்.ஏ. மயிலாடுதுறை உதவி கலெக்டர் சுபாநந்தினி, மண்டல துணை தாசில்தார் ஹரிகரன், உதவி தொடக்க கல்வி அலுவலர் குமார், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் புஷ்பலதா, வருவாய் ஆய்வாளர் ரஜினி, கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாரதி எம்.எல்.ஏ. கூறுகையில், பழைய பள்ளி கட்டிடம் விரைவில் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டப்படும் என்றும், அதுவரை பழைய பள்ளி கட்டிடம் மூடப்பட்டு அங்கு நடைபெற்ற வகுப்புகள் அருகில் உள்ள சமுதாயக் கூட்டத்தில் தற்காலிகமாக நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

தொடர்ந்து பாரதி எம்.எல்.ஏ., மயிலாடுதுறை உதவி கலெக்டர் சுபாநந்தினி மற்றும் அதிகாரிகள், மாணவன் சக்திபாலன் சிகிச்சை பெற்றுவரும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டு, மாணவன் சக்திபாலனின் பெற்றோரிடம் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.5 ஆயிரத்தை எம்.எல்.ஏ. வழங்கி ஆறுதல் கூறினார்.


Next Story