முன்னாள் மந்திரி எச்.ஒய்.மேட்டியின் செயலால் மாநில அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது ஜனார்த்தன பூஜாரி பேட்டி


முன்னாள் மந்திரி எச்.ஒய்.மேட்டியின் செயலால் மாநில அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது ஜனார்த்தன பூஜாரி பேட்டி
x
தினத்தந்தி 15 Dec 2016 11:48 PM GMT (Updated: 15 Dec 2016 11:47 PM GMT)

முன்னாள் மந்திரி எச்.ஒய்.மேட்டி ஒரு பெண்ணிடம் தவறாக நடந்த கொண்ட செயலால் மாநில அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ஜனார்த்தன பூஜாரி கூறியுள்ளார். கட்சிக்கு கெட்ட பெயர் முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தல

மங்களூரு

முன்னாள் மந்திரி எச்.ஒய்.மேட்டி ஒரு பெண்ணிடம் தவறாக நடந்த கொண்ட செயலால் மாநில அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ஜனார்த்தன பூஜாரி கூறியுள்ளார்.

கட்சிக்கு கெட்ட பெயர்

முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஜனார்த்தன பூஜாரி மங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கலால்துறை மந்திரியாக இருந்த எச்.ஒய்.மேட்டி தன்னிடம் உதவி கேட்டு வந்த பெண்ணிடம் காமகளியாட்டம் நடத்தி உள்ளார். இது சம்பந்தமாக தற்போது சி.டி. வெளியாகி உள்ள நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார். இந்த விவகாரத்தால் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு கெட்ட பெயர் தான் ஏற்பட்டு உள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்ட ஆணைய உறுப்பினர் ராஜசேகர் தன்னிடம் மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள், 2 மந்திரிகளின் ஆபாச படம் அடங்கிய சி.டி.க்கள் உள்ளது என்று கூறியுள்ளார். அவர் அந்த சி.டி.க்களை வெளியிடும் முன்பே சம்பந்தபட்ட மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் யார் என்பதை முதல்–மந்திரி சித்தராமையா கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த விவகாரம் தொடர்பாக ராஜசேகரை, சித்தராமையா ஏன் சந்தித்து பேசவில்லை. இந்த சி.டி.க்களை வெளியே கொண்டு வரக்கூடிய சக்தி சித்தராமையாவுக்கு இல்லையா?. இந்த சி.டி.க்கள் வெளியானால் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்று சித்தராமையாவுக்கு பயம் இல்லையா?. இந்த விவகாரங்கள் அனைத்தையும் கட்சியின் மேலிடம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.

பதவிக்கு ஆபத்து

மேட்டி பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டது குறித்து சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக சித்தராமையா கூறி உள்ளார். ஏன் அவரால் இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட முடியவில்லை. சித்தராமையாவின் முதல்–மந்திரி பதவிக்கு ஆபத்து ஏற்படும் நேரம் நெருங்கி விட்டது. எனவே அவர் தனது பதவியை காப்பாற்றி கொள்ள இனிமேலாவது கவனமாக இருக்க வேண்டும்.

கருப்பு பணத்தை ஒழிக்கும் பிரதமர் மோடியின் நடவடிக்கையால் மக்கள் வங்கியின் முன்பு நீண்ட வரிசையில் காத்துக் கொண்டு நிற்பதை தினமும் பார்க்க முடிகிறது. இந்த விவகாரத்தால் மோடிக்கு மக்களிடம் இருந்த நன்மதிப்பு குறைந்து விட்டது. அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறுவது கடினம்.

மக்களுக்கு தொந்தரவு

மேலும் தற்போது மின்னணு இந்தியா திட்டத்தை மோடி அறிமுகப்படுத்தி உள்ளார். உலக அளவில் வளர்ச்சி அடைந்த நாடுகளாக கருதப்படும் அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, ஜப்பானில் கூட மின்னணு முறை இன்னும் முழுமையாக அறிமுகப்படுத்தப் படவில்லை. ஆனால் மோடி ஏன் இந்த முறையை அறிமுகப்படுத்தி மக்களுக்கு தொந்தரவு கொடுத்து வருகிறார் என்று தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story