தலா ரூ.4 ஆயிரம் வீதம் கொடுத்ததால் வங்கி அதிகாரிகளுடன் வாடிக்கையாளர்கள் வாக்குவாதம்


தலா ரூ.4 ஆயிரம் வீதம் கொடுத்ததால் வங்கி அதிகாரிகளுடன் வாடிக்கையாளர்கள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 16 Dec 2016 10:30 PM GMT (Updated: 16 Dec 2016 6:37 PM GMT)

திங்கள் நகர் வங்கியில் பணம் எடுக்க சென்ற வாடிக்கையாளர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வீதம் கொடுத்ததால், வங்கி அதிகாரிகளுடன் வாடிக்கையாளர்கள் வாக்குவாதம் செய்தனர். வங்கிகளில் கூட்டம் நாடு முழுவதும் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த மாதம் 8-ந் தே

அருமனை

திங்கள் நகர் வங்கியில் பணம் எடுக்க சென்ற வாடிக்கையாளர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வீதம் கொடுத்ததால், வங்கி அதிகாரிகளுடன் வாடிக்கையாளர்கள் வாக்குவாதம் செய்தனர்.

வங்கிகளில் கூட்டம்

நாடு முழுவதும் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த மாதம் 8-ந் தேதி இரவு அறிவித்தார். பழைய நோட்டுகளுக்கு பதிலாக புதிய 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன. ஆனால் வங்கிகளுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் வந்து சேருவது தாமதம் ஆனதால் பொது மக்களுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் வினியோகிப்பது தாமதம் ஆனது. இதனால் பொது மக்கள் வங்கிகள் முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்து பணத்தை மாற்றி சென்றனர்.

குமரி மாவட்டத்தில் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்களில் பணம் இருப்பு வைக்கப்படாததால் அவை மூடியே கிடக்கின்றன.

இதனால் அனைத்து மக்களும் வங்கிகளுக்கு நேரில் சென்று பணம் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் வங்கிகளில் முற்றுகையிட்டு பணம் எடுக்க காத்திருந்தனர். குமரி மாவட்டத்தில் உள்ள அரசு வங்கிகள் அனைத்திலும் தினமும் கூட்டம் அலைமோதியது. ஒரே நேரத்தில் ஏராளமானோர் திரண்டு சென்று பணம் கேட்பதால், வங்கி ஊழியர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளானார்கள்.

வாக்குவாதம்

இதற்கிடையே குமரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசு வங்கிகளுக்கு போதுமான பணம் வழங்கப்படவில்லை எனத்தெரிகிறது. இதனால் வாடிக்கையாளர்களால் அவர்கள் கணக்கில் இருந்து ரூ.12 ஆயிரம் பணம் கூட எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

திங்கள்நகரில் உள்ள ஒரு வங்கி முன்பு நேற்று காலை ஏராளமான வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்காக குவிந்தனர். அவர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வீதம் மட்டுமே வழங்கப்படும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். பணம் குறைவாக கொடுத்ததால், வாடிக்கையாளர்களுக்கும், வங்கி அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் நடந்து அது தகராறாக மாறியது. இதுகுறித்து இரணியல் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாடிக்கையாளர்களை சமாதானப்படுத்தி வரிசையில் சென்று பணத்தை பெற்றுச்செல்லுமாறு அறிவுறுத்தினர். தொடர்ந்து வாடிக்கையாளர்கள் வங்கியின் வெளியே சாலையோரமாக நீண்ட வரிசையில் நின்று பணத்தை பெற்று சென்றனர். மேலும், அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

அருமனை

இதுபோல அருமனையில் உள்ள ஒரு வங்கியின் முன்பு ஏராளமான ஆண்களும், பெண்களும் காலையிலேயே பணம் எடுக்க காத்திருந்தனர். அவர்களுக்கு வங்கி ஊழியர்கள் டோக்கன் கொடுத்து வரிசையில் சென்று பணம் எடுக்க அறிவுறுத்தினர். இதற்கிடையே பணம் குறைவாக கொடுத்ததாக வாடிக்கையாளர்களுக்கும், வங்கி அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் தோன்றி தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அருமனை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாடிக்கையாளர்களை அமைதிபடுத்தி, வரிசையாக அனுப்பினார்கள்.

வங்கிகள் முன்பு போலீஸ் பாதுகாப்புடன் பணம் வினியோகிக்கப்பட்டதால் நேற்று அந்த பகுதிகளில் பரபரப்பு நிலவியது. இதே போன்ற நிலையே குமரி மாவட்டத்தில் உள்ள பல வங்கிகளில் காணப்பட்டது.

நாகர்கோவிலில்...

நாகர்கோவில் நகரில் உள்ள பெரும்பாலான வங்கிகளில் நேற்று காலை வங்கிகள் திறக்கப்படுவதற்கு முன்பே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். வங்கிகள் திறந்ததும் சில வங்கிகளில் முண்டியடித்துக்கொண்டு பணம் பெறும் கவுன்டர்களுக்கும், சில வங்கிகளில் டோக்கன் எடுக்கவும் மக்கள் ஓடினர். இதனால் காலையிலேயே வங்கிகள் பரபரப்புடன் காட்சி அளித்தது.

பணம் தட்டுப்பாடு பிரச்சினை முடிவுக்கு வராததால் நேற்று சில வங்கிகளில் மட்டுமே கேட்ட தொகை வழங்கப்பட்டது. சில வங்கிகளில் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையும் வழங்கப்பட்டன. சில்லரை தட்டுப்பாடும் பிரச்சினையும் தொடர்கிறது. அதேநேரத்தில் பழைய 500 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய வருபவர்களின் கூட்டம் குறைந்துள்ளது.

ஏ.டி.எம்.கள்

பண பற்றாக்குறை காரணமாக பெரும்பாலான ஏ.டி.எம்.கள் நேற்றும் பூட்டியே கிடந்தன. செயல்பட்டுக் கொண்டிருந்த ஏ.டி.எம்.களில் வழக்கம்போல் நீண்ட வரிசை இருந்தது. இதனால் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க வந்தவர்கள் குறைந்தது அரை மணி நேரம் முதல் அதிகபட்சமாக ஒரு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

தபால் நிலையங்களைப் பொறுத்தவரையில் தற்போது பணத்தட்டுப்பாடு பிரச்சினை இருந்து வருகிறது. இதனால் நேற்று நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.2 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டது. அதேநேரத்தில் பணத்தேவை அதிகமாக உள்ளவர்களுக்கு உண்மைத்தன்மையின் அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.24 ஆயிரம் வரை வழங்கப்பட்டது. நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் உள்ள ஏ.டி.எம். நேற்றும் செயல்படவில்லை. 

Next Story