கடலூரில், கடல் சீற்றம் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அவசர, அவசரமாக கரைக்கு திரும்பினர்


கடலூரில், கடல் சீற்றம் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அவசர, அவசரமாக கரைக்கு திரும்பினர்
x
தினத்தந்தி 16 Dec 2016 11:15 PM GMT (Updated: 16 Dec 2016 7:03 PM GMT)

கடலூர், கடலூரில், கடல் சீற்றமாக இருந்ததால் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அவசர, அவசரமாக கரைக்கு திரும்பினர். வார்தா புயல் கடலூர் துறைமுகத்

கடலூர்,

கடலூரில், கடல் சீற்றமாக இருந்ததால் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அவசர, அவசரமாக கரைக்கு திரும்பினர்.

வார்தா புயல்

கடலூர் துறைமுகத்தில் இருந்து நாள்தோறும் தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம், சொத்திக்குப்பம், அக்கரைக்கோரி, சித்திரைப்பேட்டை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பைபர் மற்றும் விசைப்படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான வார்தா புயலின் காரணமாக கடலூரில் கடல் சீற்றமாக இருந்தது. கடல் நீரோட்டத்திலும் மாற்றம் ஏற்பட்டது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனர். அதைத்தொடர்ந்து வார்தா புயல் கடந்த 12-ந்தேதி சென்னையில் கரையை கடந்தது. இதையடுத்து கடலூரில் கடல் உள்வாங்கியது. இருப்பினும் பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வந்தனர்.

கடல் சீற்றம்

இதற்கிடையில் சென்னையில் கரையை கடந்த வார்தா புயல் அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நீடித்து வருவதால் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

அதன்படி கடலூரில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை கன மழை கொட்டியது. கடலும் சீற்றமாக இருந்தது. கடல் காற்று அதிகமாக வீசியது. நீரோட்டத்திலும் மாற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக நேற்று அதிகாலை துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அவசர, அவசரமாக கரைக்கு திரும்பினர். ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க மீனவர்களும் போதிய மீன்கள் கிடைக்காமல் கரைக்கு திரும்பி வந்தனர்.

கரைக்கு திரும்பினர்

பின்னர் அவர்கள் தங்கள் படகுகளை துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர். அதேபோல் சிறிய பைபர் படகுகளில் தாழங்குடா பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களும் அவசரமாக கரைக்கு திரும்பினர். கடல் சீற்றமாகவும், நீரோட்டத்தில் மாற்றம் ஏற்பட்டதாலும் போதிய மீன்கள் கிடைக்காமல் கரைக்கு திரும்பிய அவர்கள் தங்கள் படகுகளை டிராக்டர் மூலம் இழுத்து கடற்கரையோரம் உள்ள தென்னை மரங்களில் பாதுகாப்பாக கட்டி வைத்தனர்.

Next Story