கோவை வங்கிகளில் பணத்தட்டுப்பாடு: பண்டிகை செலவுக்கு பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் திண்டாட்டம்


கோவை வங்கிகளில் பணத்தட்டுப்பாடு: பண்டிகை செலவுக்கு பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் திண்டாட்டம்
x
தினத்தந்தி 16 Dec 2016 10:30 PM GMT (Updated: 16 Dec 2016 7:17 PM GMT)

கோவை வங்கிகளில் பணத்தட்டுப்பாடு இருப்பதால் பண்டிகைக்காக பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் திண்டாட்டத்துக்குள்ளாகி உள்ளனர். மேலும் வியாபாரம் பாதிக்கப்படும் என்று வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். பொதுமக்கள் தவிப்பு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என

கோவை,

கோவை வங்கிகளில் பணத்தட்டுப்பாடு இருப்பதால் பண்டிகைக்காக பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் திண்டாட்டத்துக்குள்ளாகி உள்ளனர். மேலும் வியாபாரம் பாதிக்கப்படும் என்று வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

பொதுமக்கள் தவிப்பு

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்து 40 நாட்கள் ஆகியும் பண புழக்கம் இயல்பு நிலைக்கு வர வில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். கோவையில் தொழில்கள் முடங்கியுள்ளன. மக்களிடம் பண புழக்கம் இல்லாததால் அனைத்து பொருட்களின் விற்பனையும் பெருமளவில் குறைந்துவிட்டது.

நகரில் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் பூட்டப்பட்டு உள்ளன. குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே ஏ.டி.எம். திறந்துள்ளது. எனவே அங்கு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து பணத்தை எடுக்கின்றனர். இதனால் சிலமணி நேரங்களில் அந்த பணம் தீர்ந்து விடுகிறது. கோவை மாவட்டத்தில் 95 சதவீத ஏ.டி.எம். மையங்கள் முடங்கி கிடக்கிறது.

குறைந்த அளவில் பணப்பட்டுவாடா

பொதுமக்களுக்கு ஒரு வாரத்துக்கு ரூ.24 ஆயிரம், வியாபாரிகளுக்கு ரூ.50 ஆயிரம், திருமண நிகழ்ச்சிகளுக்கு ரூ.2½ லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கோவை மாவட்ட வங்கிகளுக்கு குறைந்த அளவில் தான் பணம் வழங்கப்பட்டு உள்ளது. இதனால் வங்கிகளில் கடும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. எனவே போதிய அளவில் பணம் இருப்பு இல்லாததால் பொது மக்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையும், வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையும் மட்டுமே வழங்கப்படுகிறது.

சில வங்கிகளில் பணத்தட்டுப்பாடு காரணமாக 5 ரூபாய் நாணயம், 10 ரூபாய், 20 ரூபாய் நோட்டுகளாக கொடுத்தனர். அதற்கும் நீண்ட வரிசையில் காத்திருந்தது. இதனால் பொதுமக்களுக்கும் வங்கி ஊழியர்களுக்கும் இடையில் வாக்குவாதம் நடைபெறும் நிலை உள்ளது. கடந்த வாரத்தில் ஓரளவு அதிக தொகை வழங்கப்பட்டது. ஆனால் இந்த வாரம் குறைவான தொகையே வழங்கப்படுவதால், தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் உரிமையாளர்கள் தவித்து வருகிறார்கள்.

பணம் வரவில்லை

பணத்தட்டுப்பாடு பிரச்சினையால் கோவையில் கிரைண்டர் உற்பத்தி தொழில், மோட்டார் உதிரிபாக உற்பத்தி, நகை தயாரிப்பு உள்ளிட்ட சிறு, குறு தொழில்கள் அடியோடு முடங்கி கிடக்கின்றன. இதனால் சிறு, குறு தொழிலை நம்பி வாழும் தொழிலாளர்கள் தவித்து வருகிறார்கள்.

இது குறித்து வங்கி அதிகாரிகள் கூறுகையில், கடந்த வாரம் ரிசர்வ் வங்கியில் இருந்து கோவை மாவட்ட வங்கிகளுக்கு ஓரளவு பணம் வந்தது. ஆனால் இந்த வாரம் பணம் வரவில்லை. எனவே இருக்கும் பணத்தை கொண்டு சமாளிக்கும் வகையில் வியாபாரிகள், பொதுமக்களுக்கு குறைந்த அளவிலேயே பணம் வினியோகம் செய்யும் நிலை உள்ளது. கோவை மாவட்டத்துக்கு கூடுதல் பணம் அனுப்பி வைக்குமாறு ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போதிய அளவில் பணம் இல்லாததால் ஏ.டி.எம். மையங்களிலும் பணம் வைக்க முடியாத நிலை உள்ளது என்றனர்.

பண்டிகை செலவுக்கு பணம் எடுக்க முடியாத நிலை

இந்த நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை என்று அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ளன. இதனால் பண்டிகை செலவுகளுக்கு தேவையான பணத்துக்கு என்ன செய்வது என்று பொதுமக்கள் தவித்து வருகின்றனர். அன்றாட தேவைகளுக்கே வங்கி மற்றும் ஏ.டி.எம்.களின் வாசல்களில் காத்து கிடக்கும் பொதுமக்கள் பண்டிகைக்காக புதிய துணி மற்றும் கூடுதல் செலவுகளை எப்படி சமாளிக்க போகிறோம் என்று தெரியாமல் திண்டாட்டத்தில் உள்ளனர்.

மேலும் தீபாவளிக்கு பிறகு டிசம்பர் மாதம் தான் பொருட்கள் அதிகம் விற்பனையாகும் மாதம் ஆகும். ஆனால் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பாலும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பணத் தட்டுப்பாடு போன்ற காரணங்களாலும் வியாபாரம் பாதிக்கும் அபாயம் உள்ளதாக வியாபாரிகள் கருது கின்றனர். பண்டிகை செலவுகளை சமாளிக்க போதிய பணம் எடுக்க முடியாத நிலை தொடர்ந்து நீடித் தால் சாதாரண மளிகைக் கடை முதல் பெரிய ஜவுளிக்கடை வரை விற்பனை வெகுவாக பாதிக்கும். இதனால் வியாபாரிகள் மட்டுமின்றி அவர்களின் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள் என்று நிறுவன உரிமையாளர்கள் கூறுகிறார்கள்.


Next Story