விருதுநகரில் குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் நகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை


விருதுநகரில்  குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த சீரமைப்பு  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் நகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 17 Dec 2016 10:45 PM GMT (Updated: 17 Dec 2016 1:10 PM GMT)

விருதுநகர்,டிச.18– விருதுநகரில் குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்துவதற்கு தேவைப்படும் சீரமைப்பு நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சினை விருதுநகர் நகராட்சி பகுதியில் உள்ள 36 வார்டுகளில் சுமார் 20

 விருதுநகர்,

விருதுநகரில் குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்துவதற்கு தேவைப்படும் சீரமைப்பு நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

குடிநீர் பிரச்சினை

விருதுநகர் நகராட்சி பகுதியில் உள்ள 36 வார்டுகளில் சுமார் 20 ஆயிரம் வீடுகளில் குடிநீர் இணைப்புகள் உள்ளன. இப்போதைய நிலையில் நகராட்சி நிர்வாகம் 10 நாட்கள் முதல் 12 நாட்கள் இடைவெளியில் தான் குடிநீர் வினியோகம் செய்து வருகிறது. இது தவிர பகிர்மானக் குழாய் உடைப்பு பிரச்சினைகளால் நகரின் பல பகுதிகளில் குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படாமல் உள்ளது. அப்பகுதி மக்கள் லாரிகளில் வரும் குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.

எம்.எல்.ஏ

விருதுநகர் நகராட்சி குடிநீர் வினியோகத்திற்கு நிலத்தடி நீர் ஆதாரங்களான ஆனைக்குட்டம் அணைப்பகுதி, ஒண்டிப்புலி மற்றும் காருசேரி கல்குவாரிகள், சுக்கிரவார்பட்டி கோடை கால குடிநீர் தேக்கம் ஆகியவற்றையும், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தையும் நம்பியுள்ளது. ஆனைக்குட்டம் பகுதியில் இருந்து தினசரி 20 முதல் 25 லட்சம் லிட்டர் தண்ணீரும், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து தினசரி 20 லட்சம் முதல் 25 லட்சம் லிட்டர் தண்ணீரும் கிடைத்து வருகிறது. குடிநீர் தட்டுப்பாடு காலங்களில் ஒண்டிப்புலி கல்குவாரியில் இருந்து தினசரி 10 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க வாய்ப்பு உள்ளது.

ஏன்?

நகரில் குறைந்த இடைவெளி நாட்களில் குடிநீர் வினியோகம் செய்ய வாய்ப்பிருந்தும் அதை நடைமுறைப்படுத்தாமல் அதிக நாட்கள் இடைவெளியில் தான் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இதற்கு காரணம் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோக திட்டத்தை சீரமைக்க தேவையான நடவடிக்கை எடுக்காமல் வினியோகத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் உடனடி தீர்வு காணாமல் இருப்பது தான். நகரில் குடிநீர் வினியோக மண்டலங்கள் 93 உள்ளன. இந்த மண்டலங்களை குறைத்தால் குடிநீர் வினியோக நாட்களை குறைக்கலாம் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பல முறை அறிவுறுத்தியும் பல்வேறு காரணங்களால் நகராட்சி நிர்வாகம் அதற்கான நடவடிக்கை எடுக்காத நிலை உள்ளது. மேலும் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள 3 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து இரண்டாண்டுகளாகியும் இன்னும் ஒரு மேல்நிலை தொட்டி கூட முழுமையாக முடிக்கப்படாத நிலை உள்ளது. நகராட்சி அதிகாரிகள் இத்திட்டப்பணியில் தேவையான அக்கறை காட்டுவதில்லை என்றே கூறப்படுகின்றது.

ஒண்டிப்புலி குவாரி

இதே போல் ஒண்டிப்புலி கல்குவாரியில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்கு பகிர்மானக் குழாய் சீராக இல்லாததால் தண்ணீர் கொண்டு வர முடியவில்லை. இந்த குவாரியில் இருந்து தினசரி 10 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து வந்தால் குடிநீர் வினியோக இடைவெளி நாட்களை குறைக்க வாய்ப்பு ஏற்படும். மேலும் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக பெருகும் நிலை ஏற்படும் போது அந்த உடைப்பை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்காத நிலையும் உள்ளது. இம்மாதிரியான பல்வேறு காரணங்களால் விருதுநகரில் குடிநீர் ஆதாரம் இருந்தும் நகர் மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டு வருகின்றது.

கோரிக்கை

எனவே நகராட்சி நிர்வாகம் விருதுநகரில் குடிநீர் வினியோக இடைவெளி நாட்களை குறைக்கும் வகையில் தேவையான சீரமைப்பு நடவடிக்கைகளை முன்னுரிமை கொடுத்து மேற்கொள்ள வேண்டுமென கோரப்பட்டுள்ளது. இல்லையேல் தேவையற்ற சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டு விடும்.


Next Story