லாரி டிரைவர் கொலை வழக்கில் சரண் அடைந்தவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை


லாரி டிரைவர் கொலை வழக்கில் சரண் அடைந்தவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 17 Dec 2016 7:30 PM GMT (Updated: 17 Dec 2016 2:17 PM GMT)

நெல்லை அருகே லாரி டிரைவர் கொலை வழக்கில் கோர்ட்டில் சரண் அடைந்தவரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

நெல்லை,

நெல்லை அருகே லாரி டிரைவர் கொலை வழக்கில் கோர்ட்டில் சரண் அடைந்தவரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

லாரி டிரைவர் கொலை

நெல்லை அருகே உள்ள சீவலப்பேரி தோணித்துறை கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 32) லாரி டிரைவர். இவர் கடந்த 14–ந்தேதி தோணித்துறையில் மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

பெருமாளின் அண்ணனுக்கு, அதே ஊரைச் சேர்ந்த சசிகுமார் என்பவருடைய தங்கையை பெண் கேட்டனர். அதற்கு சசிகுமார் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் சசிகுமாருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக பெருமாள் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதன்பிறகு பெருமாள் சென்னைக்கு சென்று விட்டார். இதற்கிடையே ஊருக்கு வந்த அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

கோர்ட்டில் சரண்

இதையடுத்து சசிகுமார் உள்ளிட்டோரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் சசிகுமார் (35) நாங்குநேரி கோர்ட்டில் சரண் அடைந்தார். மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி சசிகுமார் பாளையங்கோட்டை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

கொலை தொடர்பாக சசிகுமாரிடம் விசாரணை நடத்துவதற்காக அவரை போலீஸ் காவலில் எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சீவலப்பேரி போலீசார் நெல்லை கோர்ட்டில் விரைவில் மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சசிகுமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் போது கொலையில் எத்தனை பேருக்கு தொடர்பு உள்ளது? கொலைக்கான காரணம் ஆகியவை குறித்து முழு விவரமும் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story