பெரம்பலூர் அருகே போலீஸ் வேன் மீது கார் மோதல் போலீசார், நகை வியாபாரிகள் உள்பட 10 பேர் படுகாயம்


பெரம்பலூர் அருகே போலீஸ் வேன் மீது கார் மோதல் போலீசார், நகை வியாபாரிகள் உள்பட 10 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 17 Dec 2016 11:00 PM GMT (Updated: 2016-12-18T03:08:30+05:30)

பெரம்பலூர் அருகே போலீஸ் வேன் மீது கார் மோதல் போலீசார், நகை வியாபாரிகள் உள்பட 10 பேர் படுகாயம்

மங்களமேடு,

பெரம்பலூர் அருகே போலீஸ் வேன் மீது கார் மோதியதில் போலீசார், நகை வியாபாரிகள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

வார்தா புயல் மீட்பு பணி

சென்னையில் வார்தா புயல் தாக்கியதில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து போலீசார், தீயணைப்பு ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள், தொண்டு நிறுவனத்தினர் அங்கு அனுப்பப்பட்டு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல கன்னியாகுமரியை சேர்ந்த போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் (வயது 50) மற்றும் போலீஸ்காரர்கள் முருகன், வாசுதேவன், ஆபிரகாம்ராவ், ராபர்ட்ராஜ் (34) உள்பட போலீசார் சென்னை சென்று, அங்கு வார்தா புயல் பாதிப்பு பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

மீட்பு பணிகள் முடிவடைந்ததும் நேற்று முன்தினம் இரவு அவர்கள் சென்னையில் இருந்து புறப்பட்டு, கன்னியாகுமரிக்கு போலீஸ் வேனில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த நகை வியாபாரிகளான தேவராஜன் (40), கோவிந்தராஜ் (50), ரவி (30) உள்ளிட்டோர் 2 கார்களில் மதுரையில் நடைபெறவுள்ள நகை வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்தனர்.

போலீஸ் வேன் மீது கார் மோதியது

நேற்று காலை 7 மணி அளவில் பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் அருகே தேவையூர் பகுதியில், போலீஸ் வேனின் பின்னால் நகை வியாபாரிகளின் கார்கள் வந்து கொண்டிருந்தன. அப்போது திடீரென நகை வியாபாரிகள் வந்த ஒரு காரும், போலீஸ் வேனும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் போலீஸ் வேனில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட போலீஸ்காரர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி அலறினார்கள். மேலும் காருக்குள் இருந்தவர்களும் படுகாயத்துடன் வெளியே வர முடியாமல் போராடினர்.

10 பேர் படுகாயம்

இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மங்களமேடு போலீசார், விபத்தில் படுகாயமடைந்த போலீசார் மற்றும் நகை வியாபாரிகளை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தில், கன்னியாகுமரி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீஸ்காரர்கள் முருகன், வாசுதேவன், ராபர்ட்ராஜ், வினோத், ஆபிரகாம்ராவ், நகை வியாபாரிகள் தேவராஜன், கோவிந்தராஜ், ரவி, கார் டிரைவர் தஸ்தகீர் ஆகிய 10 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story