புதுச்சேரி, உழவர்கரை பகுதிக்கு ஊசுடு ஏரியில் இருந்து குடிநீர் எடுக்க மத்திய அரசு ஒப்புதல் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி


புதுச்சேரி, உழவர்கரை பகுதிக்கு ஊசுடு ஏரியில் இருந்து குடிநீர் எடுக்க மத்திய அரசு ஒப்புதல் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி
x
தினத்தந்தி 17 Dec 2016 10:27 PM GMT (Updated: 2016-12-18T03:56:53+05:30)

புதுச்சேரி, உழவர்கரை பகுதிக்கு ஊசுடு ஏரியில் இருந்து குடிநீர் எடுக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்

புதுச்சேரி

புதுச்சேரி, உழவர்கரை பகுதிக்கு ஊசுடு ஏரியில் இருந்து குடிநீர் எடுக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல்

புதுவையில் தற்போது நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே செல்கிறது. எனவே ஊசுடு ஏரியில் இருந்து தண்ணீர் எடுத்து அதனை சுத்திகரித்து புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சி பகுதிகளுக்கு வழங்க கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அப்போது அனுமதி வழங்கவில்லை.

இந்தநிலையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தற்போது இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தை 6 மாத காலத்தில் முடிக்க பொதுப்பணித்துறை தலைமை பொறியாளருக்கு உத்தரவிட்டுள்ளேன். இதன் மூலம் புதுவை, உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்சினை தீரும்.

3 மாதத்திற்கு ஒருமுறை...

கடந்த காலங்களில் அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தாததால் புதுவையில் படித்த பெரும்பாலான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது எங்கள் அரசு பொறியியல், கலை, பாலிடெக்னிக் கல்லூரிகளில் படித்து முடித்த இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு முகாமை நடத்தியுள்ளோம்.

இதில் 7 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இவர்களில் 3 ஆயிரம் பேருக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும். ஏனென்றால் அரசு அளித்த திறன் வளர்ப்பு பயிற்சியில் பங்கேற்றதன் மூலம் மாணவர்கள் நேர்முகத்தேர்வில் திறமையாக பதில் அளிப்பதாக வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்ற நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 3 மாதத்திற்கு ஒருமுறை இந்த வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும். இந்த முகாமில் 11 பன்னாட்டு நிறுவனங்கள் உள்பட 30 நிறுவனங்கள் பங்கேற்கும்.

பாதிப்பு ஏற்படாது

உச்சநீதிமன்றம் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மதுபானக் கடைகள் இருக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் சாலைகள் தான் புதுச்சேரியில் அதிகம் உள்ளன. எனவே இந்த உத்தரவால் புதுச்சேரியில் அதிகம் பாதிப்பு ஏற்படாது.

மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசுக்கும் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. இதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று மத்திய நிதித்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். அவரும் தருவதாக ஒப்புக் கொண்டுள்ளார். புதுச்சேரிக்கு 40 சதவீத ரூபாய் நோட்டுக்களே தரப்படுகிறது. அதிலும் 35 சதவீதம் ரூ.2 ஆயிரம் நோட்டுக்களே தருகின்றனர். இதனால் புதுச்சேரிக்கு தேவையான பணத்தை தர வேண்டும் என்றும் கேட்டுள்ளேன்.

சாலை பாதுகாப்பு விழா

புதுச்சேரியில் நாளை (திங்கட்கிழமை) சாலை பாதுகாப்பு விழா நடைபெற உள்ளது. இதில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்க உள்ளார். அப்போது புதுச்சேரி, சென்னை துறைமுகத்திற்கு இடையிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்படி கேட்டுள்ளேன். அதுபோல் வரும் 28-ம் தேதி திருவனந்தபுரத்தில் மாநில ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற உள்ளது. மாநில முதல்-அமைச்சர்கள் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் நான் பங்கேற்று புதுச்சேரி மாநில பாதுகாப்பு, வளர்ச்சி குறித்து பேச உள்ளேன்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

ஊழல் செய்தால் விடமாட்டோம்

பின்னர் அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும், அவர் அளித்த பதிலும் வருமாறு:-

கேள்வி: மதிய உணவு திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக கூறப்படுகிறதே?

பதில்: காங்கிரஸ் ஆட்சியில் யார் ஊழல் செய்தாலும் விட்டு வைக்க மாட்டோம். அதன் மீது துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பார்.

கேள்வி: கவர்னர் அதிகாரத்தை மீறி செயல்படுகின்றாரா?

பதில்: கவர்னருக்கு உள்ள அதிகாரங்கள் அவருக்கும், அமைச்சருக்கு உள்ள அதிகாரங்கள் அமைச்சர்களுக்கும் தெரியும். அதற்குள்தான் செயல்படுகிறோம்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

Next Story