எலக்ட்ரீசியனிடம் ரூ.1 லட்சம் மோசடி ஒருவர் கைது; 3 பேர் மீது வழக்கு


எலக்ட்ரீசியனிடம் ரூ.1 லட்சம் மோசடி ஒருவர் கைது; 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 18 Dec 2016 10:30 PM GMT (Updated: 2016-12-18T18:41:26+05:30)

திருக்கோஷ்டியூரை சேர்ந்த எலக்ட்ரீசியனிடம் பல மடங்கு பணம் தருவதாக கூறி ரூ.1 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. எலக்ட்ரீசியன் சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் அருகே உள்ள பிராமண்மனைப்பட்டியை சேர்ந்தவர் தவமணி(வயது 49). இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிற

காரைக்குடி,

திருக்கோஷ்டியூரை சேர்ந்த எலக்ட்ரீசியனிடம் பல மடங்கு பணம் தருவதாக கூறி ரூ.1 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

எலக்ட்ரீசியன்

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் அருகே உள்ள பிராமண்மனைப்பட்டியை சேர்ந்தவர் தவமணி(வயது 49). இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவருடைய நண்பர் பள்ளத்தூரில் சித்த வைத்தியசாலை வைத்திருக்கும் சுலைமான் சேட். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுலைமான் சேட், தவமணியிடம் ரூ.1 லட்சம் பணம் கேட்டுள்ளார். மேலும் சில மாதங்களில் பல மடங்காக அந்த பணத்தை தருவதாக கூறினார். அதற்கு தவமணி எதற்கு என்று கேட்டபோது அவர், கோவில் கோபுர கலசங்களில் உள்ள இரிடியம் என்ற உலோகத்தின் மதிப்பு பல கோடி ரூபாய் என்றும், இதனை தனது நண்பர் இளையான்குடி அருகே உள்ள விசுவனூரை சேர்ந்த உலகநாதன் என்பவர் வாங்கி விற்க உள்ளார் என்றும், அதற்காக ரூ.1 லட்சம் தேவைப்படுகிறது என்று கூறினார். மேலும் ரூ.1 லட்சம் பணம் கொடுத்தால் ரூ.5 கோடி வரை பல மடங்காக பணம் தருவதாக கூறினார்.

மோசடி

சுலைமான் சேட்டின் ஆசை வார்த்தைகளை நம்பிய தவமணி பணம் தருவதாக கூறினார். இதனையடுத்து தவமணி, தனது நண்பர் தமிழ்மாறன் என்பவருடன் வந்து பள்ளத்தூர் பஸ் நிறுத்தம் அருகே நின்றிருந்த சுலைமான் சேட், உலகநாதன், கோட்டையூரை சேர்ந்த சுப்பு ஆகியோரிடம் ரூ.1 லட்சம் பணத்தை கொடுத்தார். அதன்பிறகு 6 மாதங்கள் ஆகியும் சுலைமான் சேட் கூறியப்படி பணத்தை தவமணியிடம் கொடுக்கவில்லை. மேலும் கொடுத்த பணத்தை திரும்ப தாருங்கள் என்று அவர் கேட்டபோது, கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தவமணி பள்ளத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுலைமான் சேட், உலகநாதன், சுப்பு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து உலகநாதனை கைது செய்தனர். மற்ற 2 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story