இலவச பட்டாவை ரத்து செய்த சிவகாசி உதவி கலெக்டரின் நடவடிக்கை செல்லாது மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


இலவச பட்டாவை ரத்து செய்த சிவகாசி உதவி கலெக்டரின் நடவடிக்கை செல்லாது மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 18 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-18T22:13:49+05:30)

இலவச பட்டாவை ரத்து செய்த சிவகாசி உதவி கலெக்டரின் நடவடிக்கை செல்லாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட்டில் மனு விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்தவர் விஜயஅந்தோணி. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த

மதுரை,

இலவச பட்டாவை ரத்து செய்த சிவகாசி உதவி கலெக்டரின் நடவடிக்கை செல்லாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஐகோர்ட்டில் மனு

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்தவர் விஜயஅந்தோணி. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

குடும்ப கட்டுப்பாடு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கிராமப்பகுதியில் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டவர்களுக்கு தமிழக அரசு தலா 10 சென்ட் இலவச நிலம் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்ட 89 பேருக்கு ஆலமரத்துப்பட்டி சக்கம்மாள் கோவில் பகுதியில் நிலம் வழங்கப்பட்டு இலவச பட்டா வழங்கப்பட்டது.

உதவி கலெக்டர் நடவடிக்கை

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற்ற தமிழ்செல்வி, சுப்பையா ஆகியோரிடம் இருந்து 20 சென்ட் இடத்தை நான் வாங்கினேன். இந்த நிலத்தை அவர்கள் எனக்கு விற்பனை செய்ய அதிகாரிகள் ஆட்சேபமின்மை சான்றிதழ் அளித்தனர். இதன்பின்பு அந்த இடத்துக்கு என் பெயரில் பட்டா வழங்கப்பட்டது.

இந்தநிலையில் 89 பேரில் 47 பேருக்கு வழங்கிய இலவச பட்டாவை ரத்து செய்து 15.10.2015 அன்று சிவகாசி உதவி கலெக்டர் உத்தரவிட்டார். அந்த உத்தரவில் தமிழ்செல்வி, சுப்பையா ஆகியோருக்கு வழங்கிய இலவச பட்டாவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச பட்டாவை ரத்து செய்யும் முன்பு சம்பந்தப்பட்டவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி இருக்க வேண்டும். ஆனால் அதுபோன்று நோட்டீசு எதுவும் அனுப்பவில்லை. எனவே, சிவகாசி உதவி கலெக்டரின் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

ரத்து

இந்த மனுவை நீதிபதி வி.பாரதிதாசன் விசாரித்தார். மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறியிருப்பதாவது:–

இலவச பட்டா பெற்றவர்கள் அந்த இடத்தில் வீடு கட்டாததால் அவர்களது பட்டா ரத்து செய்யப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவச பட்டா பெற்றவர்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் அந்த இடத்தில் வீடு கட்ட வேண்டும் என்று எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மனுதாரர் இந்த நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ள இலவச பட்டாவை பார்க்கும்போது அதில் அதுபோன்ற நிபந்தனை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. எனவே, இலவச பட்டா பெற்றவர்கள் அந்த இடத்தில் வீடு கட்டாததால் பட்டா ரத்து செய்யப்பட்டதாக அரசு தரப்பில் கூறுவதை ஏற்க முடியாது. இலவச பட்டாவை ரத்து செய்வதற்கு முன்பு பட்டா பெற்றவர்களுக்கு நோட்டீசு அனுப்பி விளக்கம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அதுபோன்று நோட்டீசு அனுப்பி அதிகாரிகள் விளக்கம் பெறவில்லை. எனவே, இலவச பட்டாவை ரத்து செய்த சிவகாசி கலெக்டரின் நடவடிக்கை செல்லாது. அந்த நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


Next Story