சமுதாயத்தில் சிறந்த மனிதனாக வாழ மாணவர்களுக்கு நற்பண்புகளை ஆசிரியர்கள் கற்று கொடுக்க வேண்டும் மாவட்ட வருவாய் அலுவலர் பேச்சு


சமுதாயத்தில் சிறந்த மனிதனாக வாழ மாணவர்களுக்கு நற்பண்புகளை ஆசிரியர்கள் கற்று கொடுக்க வேண்டும் மாவட்ட வருவாய் அலுவலர் பேச்சு
x
தினத்தந்தி 18 Dec 2016 11:00 PM GMT (Updated: 2016-12-18T22:22:34+05:30)

சமுதாயத்தில் சிறந்த மனிதனாக வாழ மாணவர்களுக்கு நற்பண்புகளை ஆசிரியர்கள் கற்று கொடுக்க வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் பழனி கூறினார் கருத்தரங்கு திருவண்ணாமலை பிரஜாபிதா பிரம்மகுமாரிகள் அமைப்பு சார்பில் ‘கல்வி பணிக்கான நற்பண்புகளும், ஆன்மிகமும்’ என்ற

திருவண்ணாமலை,

சமுதாயத்தில் சிறந்த மனிதனாக வாழ மாணவர்களுக்கு நற்பண்புகளை ஆசிரியர்கள் கற்று கொடுக்க வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் பழனி கூறினார்

கருத்தரங்கு

திருவண்ணாமலை பிரஜாபிதா பிரம்மகுமாரிகள் அமைப்பு சார்பில் ‘கல்வி பணிக்கான நற்பண்புகளும், ஆன்மிகமும்’ என்ற தலைப்பில் கல்லூரி பேராசிரியர்களுக்கான ஒருநாள் கருத்தரங்கு திருவண்ணாமலை வேங்கிக்காலில் நடந்தது. திருவண்ணாமலை பிரம்மகுமாரி அமைப்பின் இயக்குனர் உமா தலைமை தாங்கினார். பிரம்மகுமாரி மிருத்தியுன்ஜெயா, பீனா, பாண்டியமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் முருகன் வரவேற்றார்.

கருத்தரங்கை மாவட்ட வருவாய் அலுவலர் பழனி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:–

ஆசிரியர்களின் பங்கு முக்கியம்

சமுதாயத்தில் ஒரு மனிதனை சிறந்தவனாக உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியம் வாய்ந்தது. எந்தவொரு மனிதனுக்கும் முதல் ஆசிரியர் அவர்களின் தாய் தான். குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் முன்பாக அவர்களுக்கு நல்ல கருத்துகளை கூறி நல்ல பாதையை தாய் காட்டுகிறார்.

ஆனால் வெளிஉலகுக்கு சென்ற பின்னர் குழந்தைகளின் நடத்தைகள் மாறுகிறது. சிறுவயதில் குழந்தைகள் வீட்டை தவிர்த்து அதிக நேரத்தை பள்ளிகளில் செலவிடுகிறார்கள்.

எனவே, ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு நற்பண்புகளை போதிக்க வேண்டும். பாடப் புத்தகத்தில் இருக்கும் கல்வியை மட்டும் போதிக்காமல் சமூக நடப்புகள் மற்றும் சமுதாயத்தில் சிறந்த மனிதனாக வாழ்வதற்கான வழிமுறைகளை கற்று கொடுக்க வேண்டும்.

கல்வியின் தரம்

ஆசிரியர் பணி என்பது மிகவும் புனிதமான பணியாகும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன் உதாரணமாகவும், எடுத்துக்காட்டாகவும் திகழ வேண்டும். மாணவர்களுக்கு பள்ளி மற்றும் கல்வியின் மீது விருப்பம் கொண்டு வர ஆசிரியர்கள் முயற்சி செய்ய வேண்டும். தற்போது கல்வியின் தரம் குறைந்து விட்டது. பண்டைய காலத்தில் குருகுலக்கல்வி முறை இருந்தது. ஆசிரியரை தேடி மாணவர்கள் சென்று கல்வி உள்ளிட்ட அனைத்தையும் கற்று சிறந்தவர்களாக உருவெடுத்தார்கள். குருகுலக்கல்வியில் ஆசிரியர் மாணவர்களுக்கு நற்பண்புகளை போதித்து வளர்த்தார்கள்.

தற்போது ஏராளமான கல்வி நிறுவனங்கள், பள்ளிகள் உருவாகி விட்டன. ஆனால் பண்டைய காலத்தை போன்று தரமான கல்வி இல்லை. ஆசிரியர்கள் கல்வியின் தரத்தை மேம்படுத்த பாடுபட வேண்டும். சமுதாயத்தில் சிறந்த மனிதனாக வாழ மாணவர்களுக்கு நற்பண்புகளை ஆசிரியர்கள் கற்று கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கருத்தரங்கில் தமிழ்நாடு ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜி.விசுவநாதன், திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் அசோகன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டி.விசுவநாதன், அண்ணாமலை பல்கலைக்கழக இணை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பிரகதீஸ்வரன், திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரி தாளாளர் சீனி கார்த்திகேயன், திவ்யா கல்வி நிறுவனங்களின் தாளாளர் செல்வராஜன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினார்கள்.

கருத்தரங்கில் அரசு, தனியார் கல்லூரி தாளாளர்கள், முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை பேராசிரியர் ராமு தொகுத்து வழங்கினார். முடிவில் பிரம்மகுமாரி கீதா நன்றி கூறினார்.


Next Story