பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர் அறுவடை பரிசோதனைக்கு தற்காலிக பணியாளர்கள் தேர்வு கலெக்டர் தகவல்


பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர் அறுவடை பரிசோதனைக்கு தற்காலிக பணியாளர்கள் தேர்வு கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 18 Dec 2016 10:45 PM GMT (Updated: 18 Dec 2016 5:00 PM GMT)

பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர் அறுவடை பரிசோதனைகளை மேற்கொள்ள தகுதி வாய்ந்த பணியாளர்கள் தற்காகலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளனர். இது குறித்து வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– பயி

வேலூர்,

பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர் அறுவடை பரிசோதனைகளை மேற்கொள்ள தகுதி வாய்ந்த பணியாளர்கள் தற்காகலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளனர்.

இது குறித்து வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

பயிர் காப்பீட்டு திட்டம்

வேலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர் அறுவடை பரிசோதனைகளை மேற்கொள்ள தகுதி வாய்ந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்கள் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணித்தேர்வு முகமை மூலம் நிரப்பிட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்வு பெற விருப்பம் உள்ளவர்கள் இதே துறையில் குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய உள்ள பணியாளர்கள் பயிர் அறுவடை பரிசோதனை தழைகளின் தேர்வு பணி, அறுவடைப் பணி மற்றும் அதை சார்ந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும். வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த இளநிலை பட்டப்படிப்புகள் அல்லது பட்டயப்படிப்புகள் படித்து இருக்க வேண்டும்.

தொழில்நுட்ப தகுதியாக கணினி இயக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

உடல் நல தகுதியுடன், 65 வயதுக்கு உட்பட்ட வேளாண்மைத்துறை மற்றும் புள்ளியியல் துறையில் பணிபுரிந்து இந்த பணியை மேற்கொள்ள ஆர்வமுள்ள ஓய்வு பெற்ற அலுவலர்கள் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்ய பரிசீலிக்கப்படும்.

பணிநியமன முகமைகள்

மேற்கண்ட பணியிட பணியாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ளனர். தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு மாதாந்திர தொகுப்பூதியமாக ரூ.10 ஆயிரம் வீதம் பணித்தேர்வு முகமை மூலம் வழங்கப்படும்.

எனவே, இந்த பணியினை மேற்கொள்ள தகுதி வாய்ந்தவர்கள், பதிவுத்துறைகளின் மூலம் பதிவு செய்து செயல்பட்டு வரும் பணிநியமன முகமைகள் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த பணியாளர்களை தேர்வு செய்து வழங்க தங்களது முகமையின் அடிப்படை விவரங்கள், அனுபவம் மற்றும் ஒப்பந்த பணியாளர்களை வழங்க சேவை கட்டணம் ஆகியவற்றை வேலூர் பாகாயத்தில் உள்ள வேளாண்மைத்துறை வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்திற்கு வருகிற 22–ந் தேதியன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதில் தேர்வு செய்யப்படும் முகமை உடனடியாக ஒப்பந்த பணியாளர்களை தேர்வு செய்து வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story