காவிரியில் பாதாள சாக்கடை கழிவுநீர் கலப்பது தடுக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


காவிரியில் பாதாள சாக்கடை கழிவுநீர் கலப்பது தடுக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 18 Dec 2016 11:00 PM GMT (Updated: 18 Dec 2016 8:47 PM GMT)

காவிரியில் பாதாள சாக்கடை கழிவுநீர் கலப்பது தடுக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

காவிரியில் பாதாள சாக்கடை கழிவு நீர் கலப்பது தடுக்கப்படுமா? என திருச்சி மாநகர வளர்ச்சி ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஓடை போல் காவிரி

‘வான் பொய்ப்பினும் தான் பொய்யா காவிரி’, வற்றாத ஜீவநதி என வரலாற்றிலும், இலக்கியங்களிலும் போற்றி புகழப்பட்ட காவிரி ஆறு தற்போது ஓடை போல் தண்ணீர் செல்லும் வாய்க்காலாக காட்சி அளிக்கிறது. இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் அலையடித்து ஓடிய காவிரி ஆற்றை தற்போது மணற்பாங்காக தான் காண முடிகிறது. ஆங்காங்கே குழிகளில் தேங்கி நிற்கும் மழைநீரை குளிப்பதற்கு கூட பயன்படுத்த முடியவில்லை. காவிரி தண்ணீரை நம்பி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி செய்த விவசாயிகள் கருகிய நெற்பயிரை மாடுகளை மேய விட்டு காலம் கழித்து வருகிறார்கள். இந்த கொடுமையை காண முடியாத வேதனையில் 23-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதுவரை மரணம் அடைந்து விட்டனர்.

காவிரியில் நமக்கு உரிமை இல்லையா? நமது உரிமையை நிலைநாட்டும் வகையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அமல்படுத்தாமல் வேடிக்கை பார்த்து வரும் மத்திய அரசு, எந்த கோர்ட்டு தீர்ப்பும் எங்கள் மாநிலத்தை கட்டுப்படுத்தாது, ஒரு சொட்டு தண்ணீர் கூட திறந்து விட மாட்டோம் என தொடர்ந்து அடம் பிடித்து வரும் கர்நாடக அரசு. இவற்றுக்கு இடையே தவித்து வருகிறார்கள் தமிழக மக்கள்.

திறந்து விடப்படும் கழிவு நீர்

இவை ஒரு புறம் இருக்க, மண் வளத்தை காக்க காவிரியில் கழிவு நீர் கலக்காமல் தடுக்கப்பட வேண்டும் என திருச்சி மாநகர வளர்ச்சி ஆர்வலர்களும், பொது மக்களும் தொடர்ந்து அபாய குரல் எழுப்பி வருகிறார்கள். ஆனால் யார் சொல்வதையும் காதில் வாங்காமல் காவிரியில் கழிவு நீரை திறந்து விடுவது மட்டும் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. தனியார் மட்டும் இன்றி மாநகராட்சியே காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது தான் கொடுமையான ஒன்றாகும்.

திருச்சி சிந்தாமணி பகுதியில் மாநகராட்சியின் பாதாள சாக்கடை நீரை சுத்திகரித்து வெளியேற்றும் ‘பம்பிங் ஹவுஸ்’ ஒன்று உள்ளது. காவிரி கரையில் அமைந்துள்ள இந்த பம்பிங் ஹவுசில் சுத்திகரிக்கப்படும் பாதாள சாக்கடை கழிவு நீர் சுத்தி கரிப்பு பணி முடிவடைந்த பின்னர் மெயின் குழாய் மூலமாக பஞ்சப்பூரில் உள்ள மாநகராட்சி கழிவு நீர் பண்ணைக்கு எடுத்து செல்லப்படவேண்டும். ஆனால் அங்கு எடுத்து செல்லப்படாமல் ‘ஷட்டரை’ திறந்து காவிரி ஆற்றில் விடப்படுகிறது. இதனால் காவிரி நீர் மாசு படுவதுடன் மண்வளமும் கெட்டு போகிறது.

தடுக்கப்படவேண்டும்

‘முன்பெல்லாம் இரவு நேரங்களில் மட்டுமே யாருக்கும் தெரியாமல் பம்பிங் ஹவுசில் இருந்து கழிவு நீர் திறந்து விடப்பட்டது. தற்போது இரவு பகல் என்ற வேறுபாடு இன்றி எப்போதும் திறந்து விடப்படுகிறது. இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்கிறார்கள் அப்பகுதி மக்கள். மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுப்பாரா?, பொறுத்திருந்து பார்ப்போம்.


Next Story