13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மோசடி மன்னன் கைது


13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மோசடி மன்னன் கைது
x
தினத்தந்தி 19 Dec 2016 10:45 PM GMT (Updated: 19 Dec 2016 4:35 PM GMT)

13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தும், போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்து வந்த மோசடி நபரை சிவகங்கை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பண மோசடி அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி, வெளிநாட்டில் வேலை, மருத்துவக்கல்லூரிகள், என்ஜினீயரிங் கல்லூரிகளில் இடம் வாங்க

சிவகங்கை,

13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தும், போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்து வந்த மோசடி நபரை சிவகங்கை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

பண மோசடி

அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி, வெளிநாட்டில் வேலை, மருத்துவக்கல்லூரிகள், என்ஜினீயரிங் கல்லூரிகளில் இடம் வாங்கி தருவதாக மோசடி என பல்வேறு வகைகளில் ஏராளமானோர் மோசடி செய்யப்பட்டு வருகின்றனர். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்க தான் செய்வார்கள் என்பது போல தொடர்ந்து பலர் ஏமாற்றப்படுகின்றனர். இந்த வகையில் கடந்த 13 ஆண்டிற்கும் மேலாக மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:–

ராமநாதபுரம் மாவட்டம் கல்லடிதிடல் பகுதியை சேர்ந்தவர் சதீஸ்(வயது 28). இவர் காரைக்குடியில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு, கடந்த 2015–ம் ஆண்டு செல்போன் கடைக்கு வந்து சென்ற ஆண்டாவூரணியை சேர்ந்த நளவிரும்பி(55) என்பவர் பழக்கமானார். இதனால் சதீசிடம், நளவிரும்பி அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய சதீஸ் மற்றும் இவருடைய நண்பர்கள் காரைக்குடி, ராமநாதபுரத்தை சேர்ந்த 11 பேர் ரூ.9 லட்சத்து 35 ஆயிரத்தை நளவிரும்பி, இவருடைய மனைவி செல்வமேரி, சகோதரர் சேவியர் மற்றும் பாக்கியம் சக்தி ஆகிய 5 பேரிடம் கொடுத்துள்ளனர். ஆனால் நளவிரும்பி கூறியப்படி இன்னும் வேலை வாங்கி தரவில்லை. இதுகுறித்து சதீஸ் மற்றும் அவருடைய நண்பர்கள் சிவகங்கை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் கடந்த 20–8–2016 சிவகங்கை குற்றப்பிரிவு போலீசார் நளவிரும்பி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர் விசாரணை நடத்தி வந்தனர்.

மோசடி மன்னன்

இந்தநிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் நளவிரும்பி, பல இடங்களில் கோடிக்கணக்கான ரூபாய் பெற்றுக்கொண்டு மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இவர் மீது விருதுநகர், கோவை, சென்னை உள்பட பல்வேறு பகுதியில் 16 மோசடி வழக்குகள் பதிவு செய்து இருப்பதும், கடந்த 2003–ம் சிவகங்கை பகுதியில் இதேபோன்று வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.33 லட்சம் மோசடி செய்த வழக்கில் இவருக்கு சிவகங்கை கோர்ட்டில் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதும் தெரியவந்தது. மேலும் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்தார். பின்னர் அந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி உள்ளார். மேலும் சென்னை கோர்ட்டில் பிறப்பிக்கப்பட்ட பிடிவாராண்டு, விருதுநகர் கோர்ட்டில் பிறப்பிக்கப்பட்ட வாராண்டு அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இவரை தேடி வந்ததும் தெரியவந்தது. இப்படி பல்வேறு வழக்குகளில் நளவிரும்பி மோசடி செய்து மோசடி மன்னனாக திகழ்ந்துள்ளார்.

கைது

இதனைத் தொடர்ந்து சிவகங்கை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி தலைமையில், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்கள் இளஞ்செழியன், வெள்ளைச்சாமி, முத்துராமலிங்கம் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நளவிரும்பியை நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நளவிரும்பியிடம் நடத்திய விசாரணையில், அவர் எம்.பி.ஏ. படித்தவர் என்பதும், மோசடி செய்து சம்பாதித்த பணத்தை வைத்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் மோசடி வழக்குகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story