திருவக்கரை கோவில் எதிரே வியாபாரம் நடத்த அனுமதிக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை தள்ளுவண்டி வியாபாரிகள் திடீர் முற்றுகை


திருவக்கரை கோவில் எதிரே வியாபாரம் நடத்த அனுமதிக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை தள்ளுவண்டி வியாபாரிகள் திடீர் முற்றுகை
x
தினத்தந்தி 19 Dec 2016 10:30 PM GMT (Updated: 19 Dec 2016 5:29 PM GMT)

திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவில் எதிரே வியாபாரம் நடத்த அனுமதிக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை தள்ளுவண்டி வியாபாரிகள் திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். முற்றுகை போராட்டம் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைகேட்பு

விழுப்புரம்,

திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவில் எதிரே வியாபாரம் நடத்த அனுமதிக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை தள்ளுவண்டி வியாபாரிகள் திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

முற்றுகை போராட்டம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்திருந்தனர். வானூர் தாலுகா திருவக்கரை கிராமத்தை சேர்ந்த தள்ளுவண்டி வியாபாரிகள் 30–க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

இவர்கள் அனைவரும் திடீரென கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் அவர்களை மாவட்ட கலெக்டரிடம் அழைத்துச்சென்றனர்.

வியாபாரம் நடத்த அனுமதி

அப்போது அவர்கள் கலெக்டர் எல்.சுப்பிரமணியனிடம் கூறுகையில், நாங்கள் திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவில் எதிரில் தள்ளுவண்டிகளில் கற்பூரம், ஊதுவர்த்தி, பூக்கள், பழம், தேங்காய் வைத்து வியாபாரம் செய்து வருகிறோம். பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி விற்பனை செய்து வருகிறோம். மாத பவுர்ணமி தினத்தன்று தான் வியாபாரம் சற்று அதிகமாக இருக்கும். மற்ற நாட்களில் வியாபாரம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறோம்.

இந்த கோவிலை நம்பித்தான் எங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரம் உள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எங்கள் கடைகளை போலீசார் அகற்றிவிட்டனர். மீண்டும் கடைகள் வைத்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என கூறுகின்றனர். எனவே எங்களின் குடும்பம் வறுமையில் வாடுகிறது. ஆகவே தாங்கள் இதில் தலையிட்டு வக்ரகாளியம்மன் கோவில் அருகில் தள்ளுவண்டி வியாபாரம் செய்ய எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றனர்.

இதை கேட்டறிந்த கலெக்டர் எல்.சுப்பிரமணியன், விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story