2 குழந்தைகளுடன் நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் விஷம் குடித்த பரிதாபம்: சீமான் நேரில் அஞ்சலி


2 குழந்தைகளுடன் நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் விஷம் குடித்த பரிதாபம்: சீமான் நேரில் அஞ்சலி
x
தினத்தந்தி 19 Dec 2016 10:30 PM GMT (Updated: 2016-12-20T01:22:31+05:30)

குடும்ப தகராறு காரணமாக விஷம் குடித்த நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் கார்மேகம் இறந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி அவருடைய மகன் ஹரீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மனைவி, மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்த கார்மேகம், அவருடைய

கூடலூர்,

குடும்ப தகராறு காரணமாக விஷம் குடித்த நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் கார்மேகம் இறந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி அவருடைய மகன் ஹரீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மனைவி, மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்த கார்மேகம், அவருடைய மகன் ஹரீஷ் ஆகியோரின் உடலுக்கு சீமான் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

குடும்ப தகராறு

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த நாடுகாணியை சேர்ந்தவர் கார்மேகம் (வயது 38). இவர் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளராக இருந்தார். இவருடைய மனைவி வாணிஸ்ரீ (34). இவர்களுக்கு சிந்துஜா (13) என்ற மகளும், ஹரீஷ் (11) என்ற மகனும் இருந்தனர்.

இந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக கடந்த 17–ந் தேதி இரவு கூடலூர் அருகே இரும்பு பாலம் பகுதியில் ஒரு காருக்குள் தனது 2 குழந்தைகளுடன் கார்மேகம் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் அங்கு வந்த போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கேரள மாநிலம் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

மகன் சாவு

இந்த நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணிக்கு கார்மேகம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மேலும் கார்மேகத்தின் குழந்தைகள் சிந்துஜா, ஹரீஷ் ஆகியோருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே சிகிச்சை பலனின்றி நேற்று கார்மேகத்தின் மகன் ஹரீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து மகள் சிந்துஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் கணவர் கார்மேகம், குழந்தைகள் விஷம் குடித்த தகவலை அறிந்த கார்மேகத்தின் மனைவி வாணிஸ்ரீ நாடுகாணி பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதை கண்ட பொதுமக்கள் அவரை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவருடைய நிலையும் கவலைக்கிடமாக உள்ளதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சீமான் அஞ்சலி

இதனிடையே நேற்று கார்மேகம், அவருடைய மகன் ஹரீஷ் ஆகியோரது உடல் நாடுகாணியில் உள்ள வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த பரிதாப சம்பவம் குறித்து அறிந்தும், இரவு 7.10 மணிக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் வந்து, கார்மேகம், ஹரீஷ் ஆகியோரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும் அவருடைய உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.


Next Story