தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் டாஸ்மாக்கடை அமைக்க கூடாது கலெக்டரிடம், பொதுமக்கள் வலியுறுத்தல்


தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் டாஸ்மாக்கடை அமைக்க கூடாது கலெக்டரிடம், பொதுமக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 19 Dec 2016 9:08 PM GMT (Updated: 19 Dec 2016 9:08 PM GMT)

தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் டாஸ்மாக்கடை அமைக்க கூடாது கலெக்டரிடம், பொதுமக்கள் வலியுறுத்தல்

தஞ்சாவூர்,

தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என்று கலெக்டரிடம் பொதுமக்கள் வலியுறுத்தினர்.

குறைதீர்க்கும் கூட்டம்

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் அண்ணாதுரையிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

தஞ்சை மேலவஸ்தாசாவடி கண்ணகி நகரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கண்ணகி நகரில் 60 குடும்பங்கள் வசித்து வருகிறோம். கண்ணகி நகர் தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலை அருகே டாஸ்மாக்கடை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. டாஸ்மாக் கடை அமைந்தால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையூறாகவும், விபத்துகளும், கலவரங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தேசிய நெடுஞ்சாலை அருகே டாஸ்மாக் கடை அமைக்க கூடாது. எனவே கண்ணகிநகர் அருகேயும் டாஸ்மாக்கடை அமைக்க தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டாஸ்மாக் ஊழியர்கள்

தஞ்சை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்க தலைவர் எட்வின்ஆரோக்கியராஜ் தலைமையில் ஊழியர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தஞ்சையில் கடந்த 16-ந்தேதி 3 டாஸ்மாக் கடைகளில் விற்பனையாளர்களை தாக்கி பணத்தை 3 பேர் கொள்ளையடித்து சென்று விட்டனர். சமூகவிரோதிகள் ஆயுதங்களுடன் வந்து தாக்கும் போது நாங்கள் போராடி எங்களை காப்பாற்றிக்கொள்கிறோம். ஆனால் விற்பனை தொகையை கொள்ளையடித்து சென்று விடுகின்றனர். எனவே போலீசார் 3 கடைகளில் கொள்ளையடித்துச்சென்ற தொகையை மீட்டுத்தர வேண்டும். மேலும் எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை குண்டர்சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவர்கள்

தஞ்சையில் உள்ள அம்பேத்கர் அரசு கல்லூரி விடுதியை சேர்ந்த மாணவர்கள் 6 பேர், ஆதிதிராவிடர் முன்னேற்றக்கழக தலைவர் சதா.சிவக்குமார், கொள்கை பரப்பு செயலாளர் கோவி.தமிழினியன், சின்னராஜா, விளிம்புநிலை மக்கள் பாதுகாப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி நகர செயலாளர் வெற்றி ஆகியோர் தலைமையில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தஞ்சையில் உள்ள அம்பேத்கர் மாணவர் விடுதியில் தங்கி மன்னர் சரபோஜி கல்லூரியில் நாங்கள் படித்து வருகிறோம். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எங்கள் விடுதிக்கு அருகில் இயங்கி வரும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் தங்கி பயின்று வரும் மாணவர்களுடன் சாதி ரீதியான கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2 விடுதி மாணவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார், அதிகாரிகள் அமைதி பேச்சு வார்த்தை நடத்தி சாதி ரீதியான மோதல்களில் மாணவர்கள் ஈடுபடக்கூடாது என அறிவுரை வழங்கினர். பின்னர் பிற்படுத்தப்பட்டோர் விடுதி மாணவர்களை விடுதிக்குள் அனுமதித்தனர். ஆனால் எங்களை விடுதிக்குள் அனுமதிக்கவில்லை. எனவே கலெக்டர் தலையிட்டு எங்களை விடுதியில் அனுமதிக்க ஆவன செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தொழிலாளர்கள் மனு

தஞ்சை மாநகராட்சியில் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் கோவிந்தராஜூ, செயலாளர் ஜெயபால், துணை செயலாளர் அன்பு ஆகியோர் தலைமையில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாநகராட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். தினக்கூலி நாள் ஒன்றுக்கு ரூ.600 வீதம் மாதம் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். 3 மாதத்திற்கு ஒருமுறை உயிர்காக்கும் தடுப்பூசி போட வேண்டும். அனைவருக்கும் 1 மாத போனஸ் வழங்க வேண்டும். வருங்காலவைப்புநிதி, மருத்துவ காப்பீடு அனைவருக்கும் பிடித்தம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சீர்பழங்குடியினர்

தஞ்சை மாவட்ட சீர் பழங்குடியினர் நல சங்க தலைவர் அண்ணா.பரமசிவம், செயலாளர் சஞ்சய்காந்தி, பொருளாளர் இளையராஜா, துணைத்தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் சீர்பழங்குடியினருக்கு, சீர்பழங்குடியினர் என சாதிசான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது சீர்மரபினர் என சாதி சான்றிதழ் வழங்குவதால் இலவச உயர்கல்வி பறிக்கப்பட்டு விட்டது. இந்தியா முழுவதும் குற்றப்பரம்பரை சட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சீர்பழங்குடியினர் என அழைத்து வருகின்றனர். எனவே எங்களுக்கு முன்புபோல சீர்பழங்குடியினர் என சாதிசான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story