மாயமான கணவரை கண்டுபிடித்து தரக்கோரி மனைவி கலெக்டரிடம் மனு பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடுத்தார்


மாயமான கணவரை கண்டுபிடித்து தரக்கோரி மனைவி கலெக்டரிடம் மனு பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடுத்தார்
x
தினத்தந்தி 19 Dec 2016 11:00 PM GMT (Updated: 19 Dec 2016 9:09 PM GMT)

மாயமான கணவரை கண்டுபிடித்து தரக்கோரி மனைவி கலெக்டரிடம் மனு பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடுத்தார்

திருச்சி,

மாயமான கணவரை கண்டுபிடித்து தரக்கோரி மனைவி, பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பழனிசாமி தலைமை தாங்கினார். அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கணவரை கண்டுபிடித்து தரக்கோரிக்கை

இதில் திருச்சி கீழகல்கண்டார்கோட்டை அண்ணாநகரை சேர்ந்த விஜயலலிதா தனது 2 குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் கலெக்டர் அலுவலகம் வந்தார். அவர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “எனது கணவர் செந்தில்குமார், லாரி டிரைவர். நான் லால்குடியில் உள்ள கணவர் வீட்டில் வசித்து வருகிறேன். கடந்த நவம்பர் மாதம் 3-ந் தேதி எனது கணவர் வேலைக்கு செல்வதாக கூறி சென்றார். அதன்பிறகு மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆகவே எனது கணவரை கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

மாற்றுத்திறனாளிகள் அமைப்புசாரா தொழிலாளர் நல சங்கத்தை சேர்ந்த சாகுல் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிலர் கொடுத்த மனுவில், “மாற்றுத்திறனாளியான எனக்கு மாதந்தோறும் உதவித்தொகை சரிவர கிடைக்கவில்லை. என்னைபோல் மேலும் சில மாற்றுத்திறனாளிகள் கடந்த 3 மாதமாக உதவித்தொகை கிடைக்காமல் அவதி அடைந்து வருகிறார்கள். மாற்றுத்திறனாளிகள் அமைப்புசாரா தொழிலாளர் நலசங்கத்தில் 106 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். ஆகவே எங்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

பொதுமக்கள் திடீர் தர்ணா

தண்ணீர் அமைப்பு சார்பில் மாவட்ட செயலாளர் நீலமேகம் மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், “அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் துளியும் மீறாமல் மணல் குவாரிகள் செயல்படுவதை அரசும், அரசு அதிகாரிகளும் உறுதிப்படுத்த வேண்டும். மக்களுக்கு தேவையான மணலை மட்டும் முறைப்படி எடுத்து கொள்வதற்கான உறுதியான நிலைப்பாட்டை அரசு எடுக்க வேண்டும். மணல் இல்லாவிட்டால் தண்ணீர் இல்லை. பாதுகாப்பான குடிநீர் இல்லை. பருவமழைகள் பொய்த்து வரும் நிலையில் மணல் எடுப்பு எவ்வித வரைமுறையும் இன்றி தொடர்வது எதிர்கால வளத்தை கேள்விக்குள்ளாக்கும். ஆகவே அரசு இதற்கான உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறி இருந்தனர்.

திருவெறும்பூர் மலைக்கோவில் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் நேற்று மனு கொடுக்க வந்தனர். அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். உடனே அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து அவர்கள் மனுவை கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர். அவர்கள் கொடுத்த மனுவில், “திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் மலைக்கோவில் தேர்பவனி வரும் பாதையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. ஆகவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

மகனை மீட்க வேண்டும்

திருச்சி மாவட்டம் ஓமாந்தூர் கிராமத்தை சேர்ந்த சிலர் கொடுத்த மனுவில், “ஓமாந்தூர் கிராமத்தில் 14-வது நிதிக்குழு மானியம் மூலம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் செலவில் பாலம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த பணியை உடனே தொடங்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த ஹபீப் மற்றும் அவருடைய உறவினர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “எனது மகன் ஜாபர்சாதிக் தில்லைநகரில் உள்ள ஒரு தனியார் டிராவல்ஸ் நிறுவனம் மூலம் சில நாட்களுக்கு முன்பு துபாய் சென்றார். இதற்காக அந்த நிறுவனத்தினர் ரூ.90 ஆயிரம் ரொக்கமாக பெற்றுக்கொண்டனர். ஆனால் கடைசி நேரத்தில் எனது மகனுக்கு சுற்றுலா விசா கொடுத்து ஏமாற்றி விட்டார்கள். இதனால் எனது மகன் துபாயில் கார் கழுவும் நிறுவனம் ஒன்றில் பணிக்கு சேர்ந்துள்ளார். தினமும் 14 மணி நேர வேலை கொடுக்கிறார்கள். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். இது பற்றி அறிந்த நாங்கள், தில்லைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தை அணுகி கேட்டபோது, அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை. ஆகவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து எனது மகனை மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி வர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி இருந்தனர்.

Next Story