ராதாபுரத்தில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 8 பேருக்கு வலைவீச்சு


ராதாபுரத்தில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 8 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 19 Dec 2016 9:09 PM GMT (Updated: 2016-12-20T02:39:51+05:30)

ராதாபுரத்தில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 8 பேருக்கு வலைவீச்சு

ராதாபுரம்,

ராதாபுரத்தில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 8 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அரிவாள் வெட்டு

நெல்லை மாவட்டம் ராதாபுரம் பாவேந்தர் பாரதியார் நகர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 20). இவர் நேற்று முன்தினம் வீட்டின் அருகில் நின்ற போது மர்மநபர்கள் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றனர். காயமடைந்த அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து மணிகண்டனின் சித்தி ஜெயராணி (37) ராதாபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மணிகண்டன் சில நாட்களுக்கு முன்பு ஆந்திரா மாநிலத்தில் காற்றாலை நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். பின்னர் அங்கிருந்து ஊருக்கு வந்து தற்போது ஊரில் இருந்து கொத்தனார் வேலைக்கு சென்று வருகிறார்.

மணிகண்டன் காற்றாலை நிறுவனத்தில் வேலை செய்து வந்தபோது அவருடன் அதே ஊரைச் சேர்ந்த வே.மணிகண்டன் என்பவரும் வேலை செய்து வந்துள்ளார். அப்போது அங்கு வைத்து 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் மணிகண்டன் அங்கிருந்து சொந்த ஊருக்கு வந்து விட்டார்.

மீண்டும் தகராறு

இந்த நிலையில் விடுமுறையில் ஊருக்கு வந்த வே.மணிகண்டன் நேற்று முன்தினம் மணிகண்டனை சந்தித்துள்ளார். அப்போது மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த வே.மணிகண்டன் அவருடைய நண்பர்கள் கட்டார்குளத்தை சேர்ந்த வினித் (20), ராதாபுரம் நேதாஜி நகரை சேர்ந்த ஆனந்த் (20), அதே பகுதியை சேர்ந்த வினோத் (20), கூந்தன்குழியை கிராமத்தை சேர்ந்த ரியாஸ் (21), அவருடைய தம்பி ஆன்ட்ரோ சதீஷ் (19), அதே ஊரை சேர்ந்த சேவியர் (20) உள்பட 8 பேர் சேர்ந்து மணிகண்டனை அரிவாளால் வெட்டியுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து 8 பேரையும் ராதாபுரம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story