பருவமழை பொய்த்து போனதால் குளங்களாக மாறிய பாபநாசம், மணிமுத்தாறு அணைகள்


பருவமழை பொய்த்து போனதால் குளங்களாக மாறிய பாபநாசம், மணிமுத்தாறு அணைகள்
x
தினத்தந்தி 20 Dec 2016 9:00 PM GMT (Updated: 20 Dec 2016 7:33 PM GMT)

பருவமழை பொய்த்து விட்டதால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தின் நீராதாரமாக விளங்கும் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் குளமாக காட்சி அளிக்கிறது.

நெல்லை,

பருவமழை பொய்த்து விட்டதால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தின் நீராதாரமாக விளங்கும் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் குளமாக காட்சி அளிக்கிறது.

நிரம்பி வழிந்த அணைகள்

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களின் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் ஆதாரமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் திகழ்கின்றன.

இந்த இரு அணைகளிலும் கடந்த ஆண்டு இதே நாளில் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவையும் எட்டி நிரம்பி வழிந்தன.

இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக பருவமழை பொய்த்து போனது. இதனால் அணைகளில் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்து குளம் போல் காட்சி அளிக்கிறது. ஆறுகள் குறுகி ஓடை போன்றும், குளங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டும் காட்சியளிக்கின்றன.

குடிநீர் தட்டுப்பாடு

நேற்று காலை நிலவரப்படி 118 அடி மொத்த கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர் மட்டம் தற்போது 36.29 அடியாக உள்ளது.

அணைக்கு 17 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஆனால் இங்கிருந்து தண்ணீர் வெளியேற்றம் செய்யப்படவில்லை. இதேபோல் 143 அடி மொத்த கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் தற்போதைய நீர்மட்டம் 24.20 அடியாக உள்ளது.

பாபநாசம் அணைக்கும், சேர்வலாறு அணைக்கும் இடையே சுரங்கப்பாதை மூலம் தண்ணீரை மாற்றியமைக்க வசதி உள்ளது.

எனவே பாபநாசம் அணைக்கு சேர்வலாறு அணையில் இருந்து 100 கனஅடி நீர் அனுப்பப்பட்டு அங்கிருந்து 200 கனஅடி நீர் குடிநீருக்காக தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றம் செய்யப்படுகிறது. இருந்த போதிலும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. சில பகுதிகளில் வாரம் 2 முறை அல்லது 3 முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்

இந்த நிலையில் வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் லேசான மழை பெய்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதலே மிதமான மழை பெய்து வந்தது. அணைப்பகுதியில் பாபநாசம் அணைப்பகுதியில் மட்டும் மழை பெய்துள்ளது. மற்ற அணை பகுதிகளில் மழை இல்லை.

Next Story