கிராமங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் ஆதிவாசி மக்களுக்கு விஞ்ஞானி அறிவுரை


கிராமங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் ஆதிவாசி மக்களுக்கு விஞ்ஞானி அறிவுரை
x
தினத்தந்தி 20 Dec 2016 10:15 PM GMT (Updated: 2016-12-21T01:41:35+05:30)

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று ஆதிவாசி மக்களுக்கு மத்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மைய மூத்த விஞ்ஞானி மணிவண்ணன் அறிவுரை வழங்கி உள்ளார். திறன் மேம்பாட்டு பயிற்சி ஊட்டி தீட்டுக்கல் பகுதியில

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று ஆதிவாசி மக்களுக்கு மத்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மைய மூத்த விஞ்ஞானி மணிவண்ணன் அறிவுரை வழங்கி உள்ளார்.

திறன் மேம்பாட்டு பயிற்சி

ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் மத்திய மண் மற்றும் நீர் வள ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தின் சார்பில் ஆதிவாசி மக்களுக்கு திறன்மேம்பாட்டு மற்றும் மழைநீர் சேகரிப்பு குறித்த பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. இதற்கு மைய தலைவர் கோலா தலைமை தாங்கினார்.

இந்த முகாமை பழங்குடியின ஆராய்ச்சி மைய இயக்குனர் சுப்பிரமணியம் தொடங்கி வைத்து பேசும் போது, உலகம் முழுவதும் மாறிவரும் காலநிலையால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதன்காரணமாக எதிர்காலத்தில் 3–வது உலகப்போர் தண்ணீருக்காக ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்தியாவிலும் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மழைநீரையும் சேமித்து வைத்து கொள்ள வேண்டும் என்றார்.

மழைநீர் சேகரிப்பு

இதைத்தொடர்ந்து ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானி மணிவண்ணன் ஆதிவாசி மக்களுக்கு அறிவுரை வழங்கி பேசும் போது கூறியதாவது:–

நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதன் காரணமாக விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது. ஆதிவாசி மக்கள் வனப்பகுதிகள் மற்றும் அதனை ஓட்டி வாழ்ந்து வருகின்றீர்கள். எனவே ஆதிவாசி கிராமங்களை ஒட்டியுள்ள சிறு ஓடைகளில் சிறிய தடுப்பணைகளை அமைக்கலாம்.

கற்கள், இரும்பு வலையை கொண்டும் சிறிய தடுப்பணைகளை அமைக்க முடியும். மேலும் மரக்கட்டைகளை கொண்டு குறிப்பட்ட இடைவெளியில் தடுப்பணைகளை அமைக்கலாம். இதன் மூலம் மண்அரிப்பு தடுக்கப்படுவதுடன், மழைநீரையும் சேமிக்க முடியும். மேலும் தங்களது பகுதிகளில் உள்ள சதுப்பு நிலப்பகுதிகளையும் பாதுகாக்க வேண்டும். மேலும் தங்களது கிராமங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

செயல்விளக்கம்

தொடர்ந்து ஆதிவாசி மக்களுக்கு தடுப்பணைகளை அமைப்பது குறித்து நேரடியாக செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் தோடர் இன ஆதிவாசி மக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story