மணப்பாறை சந்தைக்கு ஜல்லிக்கட்டில் சீறிப்பாயும் காளைகள் அடிமாடுகளாக விற்பனைக்கு வந்தன உரிமையாளர்கள் வேதனையுடன் விற்று சென்றனர்


மணப்பாறை சந்தைக்கு ஜல்லிக்கட்டில் சீறிப்பாயும் காளைகள் அடிமாடுகளாக விற்பனைக்கு வந்தன உரிமையாளர்கள் வேதனையுடன் விற்று சென்றனர்
x
தினத்தந்தி 4 Jan 2017 11:00 PM GMT (Updated: 2017-01-05T02:23:19+05:30)

மணப்பாறை சந்தைக்கு ஜல்லிக்கட்டில் சீறிப்பாயும் காளைகள் அடிமாடுகளாக விற்பனைக்கு வந்தன உரிமையாளர்கள் வேதனையுடன் விற்று சென்றனர்

மணப்பாறை,

ஜல்லிக்கட்டில் சீறிப்பாயும் காளைகள் மணப்பாறை சந்தைக்கு அடிமாடுகளாக விற்பனைக்கு வந்தன. இதனால் அவற்றை வேதனையுடன் அதன் உரிமையாளர்கள் விற்று சென்றனர்.

ஜல்லிக்கட்டு போட்டி

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகை காலத்தில் நடத்தப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறவில்லை. உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்துள்ளதால் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்களும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் மிகுந்த வேதனையில் உள்ளனர். ஆனால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ளது. ஆனால் இதுவரை ஜல்லிக்கட்டுக்கான எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா? நடைபெறாதா என்ற சந்தேகம் தொடர்ந்து எழுந்துள்ளது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி குறித்து எந்தவித அறிவிப்பும் வராததால் ஜல்லிக்கட்டு உரிமையாளர்கள் பலரும் தங்களது ஜல்லிக்கட்டு காளைகளை விற்று வருகின்றனர்.

சந்தைக்கு வந்த காளைகள்

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள புகழ்பெற்ற மாட்டுச்சந்தை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கி புதன்கிழமை மதியம் வரை நடைபெறும். இதில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களும் வந்து மாடுகள் வாங்கிச் செல்வார்கள்.

இந்த சந்தையில் நேற்று ஜல்லிக்கட்டு காளைகளும் அடிமாடுகளாய் விற்பனைக்கு வந்திருந்தன. ஜல்லிக்கட்டு கன்றுக்குட்டி முதல் திடகாத்திரமான கட்டுடல் கொண்ட காளை வரை அடிமாடுகளாய் விற்கப்பட்டன. அதிக விலைக்கு விற்கும் ஜல்லிக்கட்டு காளைகள் எல்லாம் மிகவும் குறைந்த விலைக்கே விற்றதால் அதன் உரிமையாளர்களும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் மிகுந்த வேதனை அடைந்தனர்.

மேலும் களத்தில்சீறிப் பாயவேண்டிய நல்ல ஜல்லிக்கட்டு காளைகளும் கறிக்கடைக்கு அனுப்பி வைக்கின்ற நிலை ஏற்பட்டு விட்டதே என்று ஜல்லிக்கட்டு காளைகளை விற்க மனமின்றி அதன் உரிமையாளர்கள் வேதனையோடு விற்று சென்றதை பார்க்க முடிந்தது. ஜல்லிக்கட்டு தொடர்பாக இது வரை எந்த அறிவிப்பும் வராததாலும் காளைகளை வைத்து பராமரித்திட வழியில்லாததாலும் விற்றுச் செல்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

Next Story