ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி விழிப்புணர்வு பிரசாரம்: புதுச்சேரி பட்டதாரி பெண் கைது


ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி விழிப்புணர்வு பிரசாரம்: புதுச்சேரி பட்டதாரி பெண் கைது
x
தினத்தந்தி 4 Jan 2017 10:45 PM GMT (Updated: 2017-01-05T02:33:42+05:30)

ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்ட புதுச்சேரி பட்டதாரி பெண் கைது செய்யப்பட்டார். புதுச்சேரி பெண் கைது புதுச்சேரியை சேர்ந்த மகேஸ்வரி (வயது 28). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர், ஜல்லிக்கட்டு ஆர்வலர். ஜல்லிக்கட்டு நடத

மதுரை,

ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்ட புதுச்சேரி பட்டதாரி பெண் கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரி பெண் கைது

புதுச்சேரியை சேர்ந்த மகேஸ்வரி (வயது 28). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர், ஜல்லிக்கட்டு ஆர்வலர். ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மோட்டார் சைக்கிள் மூலம் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இவர் சென்னை, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கோவை, ஈரோடு வழியாக நேற்று மதுரைக்கு வந்தார்.

பின்னர் அவர் மோட்டார் சைக்கிளில் அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு வாடிவாசலை பார்ப்பதற்காக சென்றார். அவருடன் மதுரை பகுதியை சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் 7 பேர் உடன் சென்றனர். இந்த தகவல் அறிந்த அலங்காநல்லு£ர் போலீசார் அவர்களை கூடல்நகரை அடுத்த சிக்கந்தர்சாவடி பகுதியிலேயே தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக மகேஸ்வரியை கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.

மகேஸ்வரி கைது செய்யப்பட்டதை கண்டித்து ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

விழிப்புணர்வு பிரசாரம்

அங்கு மகேஸ்வரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–

காளை இனங்களை பாதுகாக்க வேண்டுமென்றால் ஜல்லிக்கட்டு அவசியம் நடத்த வேண்டும். அதற்கு, காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஒவ்வொரு ஊராக சென்று விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறேன். எனது பிரசாரத்துக்கும் எந்த அமைப்புகளுக்கும் தொடர்பு கிடையாது.

எனது பிரசாரம் குறித்த முகநூலில் குறிப்பிட்டு உதவிகள் கேட்டிருந்தேன். அதன்மூலம் தான் நான் போகின்ற இடத்தில் எல்லாம் உதவி செய்கிறார்கள். தற்போதும் அலங்காநல்லூருக்கு வழிகாட்டுவதற்காக ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வந்தனர். ஆனால் நாங்கள் ஊர்வலமாக செல்வதாக கருதி போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்னை கைது செய்துள்ளனர்.

நான் தனிநபராக தான் இந்த பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளேன். மதுரையில் இருந்து புறப்பட்டு நெல்லை சென்று அங்கிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், கடலூர் வழியாக புதுச்சேரியை அடைய திட்டமிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story