போக்குவரத்து விதிகளை மீறியதாக நீலகிரியில் கடந்த ஆண்டு 1 லட்சத்து 35 ஆயிரம் வழக்குகள் பதிவு ரூ.1 கோடியே 83 லட்சம் அபராதம் வசூல்


போக்குவரத்து விதிகளை மீறியதாக நீலகிரியில் கடந்த ஆண்டு 1 லட்சத்து 35 ஆயிரம் வழக்குகள் பதிவு ரூ.1 கோடியே 83 லட்சம் அபராதம் வசூல்
x
தினத்தந்தி 5 Jan 2017 10:45 PM GMT (Updated: 5 Jan 2017 5:08 PM GMT)

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு போக்குவரத்து விதிகளை மீறியதாக 1 லட்சத்து 35 ஆயிரத்து 717 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.1 கோடியே 83 லட்சத்து 24 ஆயிரத்து 130 அபராதமாக வசூலிக்கப்பட்டது. போக்குவரத்து விதிமீறல் நீலகிரி மாவட்டத்தில் விபத்த

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு போக்குவரத்து விதிகளை மீறியதாக 1 லட்சத்து 35 ஆயிரத்து 717 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.1 கோடியே 83 லட்சத்து 24 ஆயிரத்து 130 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

போக்குவரத்து விதிமீறல்

நீலகிரி மாவட்டத்தில் விபத்துகளை தடுக்க போலீசார் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்ட போதிலும் பலர் வாகனங்களை விதிமுறை மீறி இயக்கி வருகிறார்கள். விதிமுறை மீறும் வாகனங்கள் ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்வதுடன், அபராதமும் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு போக்குவரத்து விதிகளை மீறியதாக நீலகிரி மாவட்டத்தில் போலீசார் சார்பில் 1 லட்சத்து 35 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்படி அதிவேகமாக வாகனம் ஓடியதாக 870 பேர் மீதும், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 2 ஆயிரத்து 354 பேர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதிக பாரம் ஏற்றி சென்றதாக 4 ஆயிரத்து 338 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஹெல்மெட் அணியாமல்...

செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டியதாக 354 வழக்குகளும், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஓட்டியதாக 3 ஆயிரத்து 860 பேர் மீது வழக்கும், முரட்டுத்தனமாக மற்றவர்களை அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதாக 265 வழக்குகளும், ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியதாக 35 ஆயிரத்து 106 வழக்குகளும், வாகனங்களில் முகப்பு விளக்கு எரியாததற்காக 1,504 வழக்குகளும், சீட் பெல்ட் அணியாமல் சென்றதற்காக 2 ஆயிரத்து 244 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

அதிக புகைகளை வெளியேற்றியபடி சென்றதற்காக 766 வழக்குகள், இன்சூரன்ஸ் இல்லாமல் சென்றதற்காக 1,116 வழக்குகள், படிக்கட்டுகளில் பயணம் செய்தற்காக 310 வழக்குகள், கார்களில் கருப்பு நிற கண்ணாடிகளை அகற்றாததற்கு 250 வழக்குகள் உள்பட போக்குவரத்து விதிகளை மீறியதாக மொத்தம் 1 லட்சத்து 35 ஆயிரத்து 716 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அபராதம்

மேலும் இந்த வழக்குகள் மூலம் உடனடி அபராதமாக ரூ.1 கோடியே 28 லட்சத்து 48 ஆயிரத்து 505 விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. இதுமட்டுமின்றி கோர்ட்டு மூலம் ரூ.54 லட்சத்து 75 ஆயிரத்து 625 வசூலிக்கப்பட்டது. இதன் மூலம் மொத்தம் ரூ.1 கோடியே 83 லட்சத்து 24 ஆயிரத்து 130 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.


Next Story