விபத்தில் சிக்கிய எலக்ட்ரீசியன் சாவு: போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்ததாக உறவினர்கள் சாலைமறியல்


விபத்தில் சிக்கிய எலக்ட்ரீசியன் சாவு:  போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்ததாக உறவினர்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 5 Jan 2017 10:15 PM GMT (Updated: 5 Jan 2017 6:00 PM GMT)

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியை சேர்ந்த மலைச்சாமி மகன் மோகன்ராஜ்(வயது 25). எலக்ட்ரீசியன். இவர் கடந்த 2–ந்தேதி அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது முன்னால் சென்ற டிராக்டர் திடீரென திரும்பியதால், எதிர்பாராதவிதமாக அந்த டிராக்டரில்

மதுரை,

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியை சேர்ந்த மலைச்சாமி மகன் மோகன்ராஜ்(வயது 25). எலக்ட்ரீசியன். இவர் கடந்த 2–ந்தேதி அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது முன்னால் சென்ற டிராக்டர் திடீரென திரும்பியதால், எதிர்பாராதவிதமாக அந்த டிராக்டரில் மோதி மோகன்ராஜ் படுகாயம் அடைந்தார். அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். அங்கு அவரது உடல் பிரேதபரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைப்பதற்காக வைக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்திய தாடிக்கொம்பு போலீசார், மோகன்ராஜ் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்று டிராக்டர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்ததாக அவரது உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மோகன்ராஜ் உடலை வாங்க மறுத்து, அரசு ஆஸ்பத்திரி முன்பு நேற்று மாலை 5 மணி அளவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், "டிராக்டர் உரிமையாளர் அரசியல் கட்சி ஒன்றின் பிரமுகராக இருப்பதால் போலீசார் அவருக்கு ஆதரவாக பொய் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மோகன்ராஜ் இறப்புக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவர்களிடம் மதிச்சியம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் மோகன்ராஜின் உடலை வாங்கிக்கொண்டு திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையம் முன்பு போராட்டம் நடத்தப்போவதாக கூறி சென்றனர். மோகன்ராஜின் மனைவிக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் குழந்தை பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story