ஏ.டி.எம். எந்திரத்தின் மாதிரியை பாடையில் தூக்கி வந்து காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்


ஏ.டி.எம். எந்திரத்தின் மாதிரியை பாடையில் தூக்கி வந்து காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 5 Jan 2017 9:00 PM GMT (Updated: 2017-01-06T00:50:32+05:30)

ஏ.டி.எம். எந்திரத்தின் மாதிரி போன்று தயார் செய்து, அதை பாடையில் தூக்கி வந்து நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை,

ஏ.டி.எம். எந்திரத்தின் மாதிரி போன்று தயார் செய்து, அதை பாடையில் தூக்கி வந்து நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நூதன போராட்டம்

நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நேற்று காலையில் போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராம்நாத் தலைமை தாங்கினார். மேலிட பார்வையாளர் மாதவன் முன்னிலை வகித்தார். புழக்கத்தில் இருந்த ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என அறிவித்த மத்திய அரசை கண்டித்து இந்த போராட்டம் நடந்தது.

அப்போது, வங்கி ஏ.டி.எம். எந்திரம் போன்று மாதிரி வடிவமைக்கப்பட்டு, அதை பாடையில் தூக்கிச் சென்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

அவர் பேசும் போது, “1000, 500 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு திடீரென்று செல்லாது என அறிவித்தது. இதனால் பொதுமக்கள் வங்கிகளில் பணம் எடுக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் இல்லை. அவை காட்சி பொருளாகவே இருக்கின்றன. அதனால்தான் நாங்கள் ஏ.டி.எம். எந்திரத்தின் மாதிரியை பாடையில் வைத்து போராட்டம் நடத்துகிறோம்” என்றார்.

கோஷங்கள்

கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், மாநில செயலாளர் ஆலடி சங்கரையா, விவசாய அணி மாநில செயலாளர் சங்கரபாண்டியன், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் காமராஜ், செயற்குழு உறுப்பினர் முரளிராஜா, சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் அப்துல்காதர், துணை தலைவர்கள் வேணுகோபால், வாகை கணேசன், பொதுச் செயலாளர்கள் சிவசுப்பிரமணியன், ஸ்டாலின், சோமசுந்தரம், இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் தருவை காமராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story