ஸ்ரீரங்கத்தில் நாளை மறுநாள் சொர்க்கவாசல் திறப்பு: பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க புதிய முறை கடைபிடிக்கப்படும் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் பேட்டி


ஸ்ரீரங்கத்தில் நாளை மறுநாள் சொர்க்கவாசல் திறப்பு: பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க புதிய முறை கடைபிடிக்கப்படும் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் பேட்டி
x
தினத்தந்தி 5 Jan 2017 10:45 PM GMT (Updated: 5 Jan 2017 8:44 PM GMT)

ஸ்ரீரங்கத்தில் நாளை மறுநாள் சொர்க்கவாசல் திறப்பு: பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க புதிய முறை கடைபிடிக்கப்படும் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் பேட்டி

திருச்சி,

ஸ்ரீரங்கத்தில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) சொர்க்கவாசல் திறப்பின் போது, பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க புதிய முறை கடைபிடிக்கப்படும் என திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் எ.அருண் தெரிவித்தார்.

ரெங்கநாதர் கோவில்

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் மாதம் 29-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 5 மணிக்கு நடைபெறுகிறது. சொர்க்கவாசல் திறப்பையொட்டிபாதுகாப்பு பணிகள் குறித்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் எ.அருண் நேற்று மாலை கோவிலில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவில், சொர்க்கவாசல் திறப்பிற்கு முன்பு ரெங்கா, ரெங்கா கோபுரம் வாயிலில் மேற்கு புறமாக அமைக்கப்பட்டுள்ள வரிசை தடுப்புகள் வழியாக இலவச தரிசனத்திற்கு மொத்தம் 4 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

அதிகாலை 2 மணி வரை...

இலவச தரிசனம் வழியாக செல்லும் பக்தர்கள் பவித்ர மண்டபம், வாகன மேடை, துரைபிரகாரம், பிரசன்ன முன் மண்டபம் ஆகிய இடங்களில் அமர வேண்டும். ரெங்கா, ரெங்கா கோபுரத்தின் நடுப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள் வழியாக சந்தன மண்டபத்திற்கு முக்கிய பிரமுகர்கள், ரூ.3 ஆயிரத்திற்கான நுழைவுச்சீட்டு உள்ளவர்கள் மற்றும் அர்ச்சகர்கள் உள்ளே செல்லலாம்.

கிழக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள் வரிசை தடுப்புகள் வழியாக கருவூலமேடை செல்ல அனுமதிச் சீட்டு பெற்றுள்ள உபயதாரர்கள் மற்றும் கிளிமண்டபம் செல்ல ரூ.500-க்கான நுழைவுச்சீட்டு உள்ளவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அனுமதிச் சீட்டின் பின்பகுதியில் பாதையின் வரைபடம் குறிப்பிடப்பட்டுள்ளது. ரெங்கா, ரெங்கா கோபுரம் வழியாக அமைக்கப்பட்டுள்ள 3 வழிகளிலும் நாளை (சனிக்கிழமை) இரவு 11 மணி முதல் 8-ந்தேதி அதிகாலை 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப் படுவார்கள்.

முத்தங்கி சேவை

கிழக்கு வாசல் வழியாகவோ (வெள்ளை கோபுரம்), வடக்கு வாசல் வழியாகவோ சொர்க்கவாசல் திறப்பிற்கு முன்பு பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது. சொர்க்கவாசல் திறப்பிற்கு பின்பு ரெங்கா, ரெங்கா கோபுரம் மேற்கு பகுதியில் உள்ள வரிசை தடுப்புகள் வழியாக சொர்க்கவாசல் இலவச தரிசனம் செய்ய செல்பவர்கள் கார்த்திகை கோபுரம், ஆரியபட்டாள் கோபுரம், துரைப்பிரகாரம் வழியாக செல்லலாம். கிழக்கு பகுதியில் உள்ள தடுப்புகள் வழியாக மூலவர் முத்தங்கி சேவைக்கு இலவச தரிசனத்திற்கு கார்த்திகை கோபுரம், ஆரியபட்டாள் கோபுரம், நாழிகேட்டான் கோபுரம் வழியாக வரிசையாக அனுப்பப்படுவார்கள். முத்தங்கி சேவை முடிந்து தொண்டமான் கேட் வழியாக வெளிப்புறம் சென்று சொர்க்கவாசலை அடையலாம்.

கிழக்கு வாசலில் தென்புறமாக அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள் வழியாக ரூ.250 கட்டண தரிசனத்தில் மூலவர் முத்தங்கி சேவைக்கு செல்பவர்கள் வெளிமணல் வெளி, உள் மணல் வெளி, ஆரிய பட்டாள் கோபுரம், நாழி கேட்டான் கோபுரம் வழியாக செல்லலாம்.

சொர்க்கவாசல் மற்றும் முத்தங்கி சேவை முடிந்து அனைத்து பக்தர்களும் வெள்ளை கோபுரம் வழியாக வெளியே செல்ல வேண்டும். ஆயிரங்கால் மண்டபத்தில் உற்சவரை தரிசிக்க வடக்கு வாசல் வழியாக மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். கோவிலுக்குள் கூட்டத்தில் தள்ளு-முள்ளுவை தவிர்க்க இந்த ஆண்டு புதிய முறை கடைபிடிக்கப்பட உள்ளது. அதாவது பகுதி, பகுதியாக பக்தர்களை ஒரு தடுப்பு கம்பிகள் அமைத்து தடுத்து அனுப்பி வைக்கப்படுவார்கள். ஒரு பகுதியில் 500 பக்தர்கள் அடைக்கப்பட்டு வரிசையாக அனுப்பப்படுவார்கள். இதன் மூலம் பக்தர்கள் நெரிசல் தவிர்க்கப்படும்.

4,500 போலீசார்

பாதுகாப்பு பணியில் 7 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளும், 4 ஆயிரத்து 500 போலீசாரும் ஈடுபட உள்ளனர். . பக்தர்கள் உடைமைகளை கொண்டு வருவதை தவிர்க்கவும். பக்தர்கள் கொண்டு வரும் செல்போன் மற்றும் பொருட்கள் பலத்த சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படும். வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். 47 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 13 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story