பிரான்ஸ் நாட்டில் கொலை செய்யப்பட்ட நாச்சியார்கோவில் என்ஜினீயரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது உறவினர்கள் கதறல்


பிரான்ஸ் நாட்டில் கொலை செய்யப்பட்ட நாச்சியார்கோவில் என்ஜினீயரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது உறவினர்கள் கதறல்
x
தினத்தந்தி 5 Jan 2017 11:00 PM GMT (Updated: 2017-01-06T02:15:36+05:30)

பிரான்ஸ் நாட்டில் கொலை செய்யப்பட்ட நாச்சியார்கோவில் என்ஜினீயரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது உறவினர்கள் கதறல்

திருவிடைமருதூர்,

பிரான்ஸ் நாட்டில் கொலை செய்யப்பட்ட நாச்சியார்கோவில் என்ஜினீயரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

என்ஜினீயர்


தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் திருநறையூர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவருடைய மனைவி மணிமேகலை. இவர்களுக்கு மணிமாறன்(25)என்ற மகனும், பொன்னுமணி(23) என்ற மகளும் உள்ளனர். அ.தி.மு.க. பிரமுகரான தங்கவேல் ஏனநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் இயக்குனராக உள்ளார். மணிமாறன் என்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு மேற்படிப்பு(எம்.எஸ்) படிப்பதற்காக கடந்த 2013–ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டிற்கு சென்றார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு பிரான்ஸ் நாட்டில் மேற்படிப்பு படித்து முடித்ததற்கான பட்டம் வாங்கிவிட்டதாகவும், அங்கேயே ஒரு நிறுவனத்தில் ரூ.2 லட்சம் மாதசம்பளத்தில் பணி கிடைத்துள்ளதாகவும், ஜனவரி 2–ந்தேதி முதல் வேலைக்கு செல்ல உள்ளதாகவும் தனது பெற்றோரிடம் மணிமாறன் செல்போனில் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் கொலை


இந்தநிலையில் கடந்த மாதம் (டிசம்பர்) 23–ந் தேதி பிரான்சில் இருந்து மணிமாறனின் நண்பர்கள் அவரது பெற்றோரிடம் செல்போனில் பேசியுள்ளனர். அப்போது யாரோ மர்ம நபர்கள் மணிமாறனை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மணிமாறனின் பெற்றோர் தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரையை சந்தித்து தனது மகனின் உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மனுகொடுத்தனர். இதையடுத்து மாநில, மத்திய அரசுகள் மணிமாறனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்தது.

உறவினர்கள் கதறல்


இதை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டில் இருந்து மணிமாறனின் உடல் விமானம் மூலம் நேற்று காலை சென்னை வந்தது. பின்னர் மணிமாறனின் உடலை அவரது தந்தை தங்கவேல் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கிருந்து அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் நேற்று மாலை 5 மணியளவில் நாச்சியார்கோவில் திருநறையூரில் உள்ள மணிமாறன் வீட்டிற்கு உடலை கொண்டு வந்தனர். அப்போது அந்தப்பகுதியை சேர்ந்தவர்களும், உறவினர்களும் மணிமாறனின் உடலை பார்த்து கதறி அழுதனர். ஆர்.கே.பாரதிமோகன் எம்.பி., எம்.ரெங்கசாமி எம்.எல்.ஏ., திருவிடைமருதூர் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஏ.வி.கே.அசோக்குமார், நெல்லை ரமேஷ்கண்ணன், பாண்டியராஜன், ஜெகன், ராஜீ உள்ளிட்ட திரளான அ.தி.மு.க.வினர் கலந்துகொண்டு மணிமாறன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.


Next Story