முறையாக அகற்றுவதில் அதிகாரிகள் அலட்சியம் மாநகராட்சி பூங்காக்களில் மலைபோல் குவிந்த மரக்கழிவுகள் உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை


முறையாக அகற்றுவதில் அதிகாரிகள் அலட்சியம் மாநகராட்சி பூங்காக்களில் மலைபோல் குவிந்த மரக்கழிவுகள் உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 5 Jan 2017 9:14 PM GMT (Updated: 2017-01-06T02:44:26+05:30)

மாநகராட்சி பூங்காக்களில் மலைபோல் குவிந்த மரக்கழிவுகளை அகற்றுவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால் அவற்றை உடனடியாக அகற்ற நடவடிக்கை

சென்னை,

மாநகராட்சி பூங்காக்களில் மலைபோல் குவிந்த மரக்கழிவுகளை அகற்றுவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால் அவற்றை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மாநகராட்சி பூங்காக்கள்

சென்னை மாநகராட்சி பகுதியில் 456 பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்காக்களில் அழகிய செடிகள் மற்றும் உடலுக்கு நலம் பயக்கும் மூலிகை செடிகள் நடப்படுகின்றன. மேலும், நீர் ஊற்று, நீர்வீழ்ச்சி, அமரும் இருக்கைகள் மற்றும் சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், வண்ண விளக்குகளுடன் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

வார்தா புயலால் இந்த பூங்காக்களில் இருந்த ஒரு சில மரங்கள் முறிந்தும், வேரோடு சாய்ந்தும் விட்டன. இந்த மரக்கழிவுகள் சில பூங்காக்களில் குவியலாக குவித்து வைக்கப்பட்டு உள்ளன. இதனால் பூங்காக்களுக்கு வரும் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். இவற்றை முறையாக அகற்றுவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக கூறப்படுகிறது.

கொட்டப்படும் மரக்கழிவுகள்

அடையாறு டி.ஜி.எஸ்.தினகரன் சாலையில் சென்னை மாநகராட்சி விளையாட்டு திடல் உள்ளது. கோழிப்பண்ணை மைதானம் என்று அழைக்கப்படும் இந்த மைதானத்தில் கால்பந்து, கிரிக்கெட், கூடைப்பந்து விளையாடுவதற்கு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. அத்துடன் உடற்பயிற்சி நிலையமும் செயல்பட்டு வருகிறது.

வார்தா புயலால் அடையாறு, மயிலாப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் முறிந்து விழுந்த மரங்களின் கழிவுகள் அனைத்தும் எடுத்துவரப்பட்டு, இந்த மைதானத்தில் மலைபோல் கொட்டி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு விளையாட முடியாமல் போனதுடன், காலை மற்றும் மாலையில் நடைபயிற்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

விளையாட்டு வீரர்கள் கோரிக்கை

கோபாலபுரத்தில் உள்ள மாநகராட்சி விளையாட்டு திடலிலும் இதுபோன்று மரக்கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளன. அதில் சில தினங் களுக்கு முன்பு திடீரென தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

இதுபோன்று கோழிப்பண்ணை மைதானம் அருகில் வழிப்பாட்டு தலங்கள், பெட்ரோல் நிலையங்கள், மகளிர் கல்லூரி மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இருப்பதால் அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பாக அங்குள்ள மரக்கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று விளையாட்டு வீரர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து ஆர்.ஏ.புரத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மணிகண்டன், நாகராஜன் ஆகியோர் கூறியதாவது:-

தயார் நிலையில் தீயணைப்பு வாகனம்

பல இடங்களில் முறிந்து விழுந்த மரங்களை எடுத்து வந்து மைதானம் முழுவதும் கொட்டி மலைபோல் குவித்து வைத்து உள்ளனர். இதனால் விளையாட முடியாமல் போனதுடன், நடைபயிற்சியும் செய்ய முடியாமல் போய்விட்டது. அதைவிட முக்கியமாக தீ விபத்து ஏற்படாமல் இருப்பதற்கு முன்பாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி உள்ளோம்.

தவறும் பட்சத்தில் விளையாட்டு வீரர்களே மரக்கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். இதனால் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனம் ஒன்று மைதானம் முன்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Next Story