கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி கிராம மக்கள் மனு


கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 30 Jan 2017 10:45 PM GMT (Updated: 30 Jan 2017 3:02 PM GMT)

குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி கிராம மக்கள் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

கிருஷ்ணகிரி

கலெக்டரிடம் மனு

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், கரடிஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட தேவர்முக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் கதிரவனை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

எங்கள் ஊரில் 1,500–க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறோம். கடந்த 5 மாதமாக எங்கள் ஊரில் தண்ணீர் பிரச்சினை உள்ளது. மேலும் கடந்த 9 நாட்களாக தண்ணீர் வரவில்லை. இதனால் தேவர்முக்குளம், ஆட்டுப்பள்ளன் கொட்டாய், ராமேநத்தம், ஏரிக்கரை கொட்டாய், சுல்லிஅள்ளி உள்ளிட்ட கிராம மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

கரடிஅள்ளி, பெரியண்ணன் கொட்டாய், காட்டுக்காரன் கொட்டாய் ஆகிய 3 கிராமங்களை கடந்து தான் எங்கள் ஊருக்கு தண்ணீர் வர வேண்டும். தற்போது எங்கள் ஊருக்கு தண்ணீர் வராததால் மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறோம். இது தொடர்பாக நாங்கள் வட்டார வளர்ச்சி அலுவலகம், ஊராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தோம்.

ஆனாலும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே எங்கள் கிராமத்திற்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பட்டா வழங்க வேண்டும்

தேன்கனிக்கோட்டை தாலுகா இருதாளம் ஊராட்சிக்கு உட்பட்ட சிக்கன்குட்டை ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:– நாங்கள் 30–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அந்த பகுதியில் வசித்து வருகிறோம். சுமார் 100 ஆண்டுகளாக எங்களது தலைமுறையினர் விவசாயம் செய்து வருகிறோம். இந்த நிலையில் எங்களுக்கு பட்டா வழங்க கோரி, நீண்ட நாட்களாக மனு கொடுத்து வருகிறோம்.

கடந்த 4 ஆண்டுகளாக எங்களிடம் வரி வாங்க அதிகாரிகள் மறுக்கிறார்கள். மேலும் எங்களை அந்த இடத்தில் இருந்து காலி செய்யுமாறு கூறி வருகிறார்கள். ஆகவே எங்களுக்கு புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வழங்கிட வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story