5-ம் வகுப்பு வரை தமிழ்வழி கல்வியை கட்டாயமாக்க வேண்டும்


5-ம் வகுப்பு வரை தமிழ்வழி கல்வியை கட்டாயமாக்க வேண்டும்
x
தினத்தந்தி 30 Jan 2017 11:00 PM GMT (Updated: 2017-01-30T22:54:18+05:30)

5-ம் வகுப்பு வரை தமிழ்வழி கல்வியை கட்டாயமாக்க வேண்டும் என்று உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தஞ்சாவூர்,

ம.நடராசன் அறக்கட்டளை

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக இலக்கியத்துறை மற்றும் புதிய பார்வை ஆசிரியர் ம.நடராசன் அறக்கட்டளை சார்பில் தமிழ் அறிஞர்கள் மற்றும் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு சிறப்பு சொற்பொழிவுகள் நேற்று நடந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் க.பாஸ்கரன் தலைமை தாங்கினார். மருதப்பா அறக்கட்டளை விளார் சாமிநாதன் முன்னிலை வகித்தார்.

இதில் உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈழத்தில் நடந்த போராட்டங்கள் வெற்றி பெற வேண்டும் என்று துணை நின்றவர் புதிய பார்வை ஆசிரியர் ம.நடராசன். மத்திய அரசிலும், பிற மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சியினரிடமும் நெருக்கமாக இருப்பவர் ம.நடராசன். ஈழத்தில் மாவீரர் உள்ளிட்டவர்களின் நினைவுசின்னங்கள் சிதைந்த போது தஞ்சையை அடுத்த விளாரில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை அவரும், அவரது குடும்பத்தினரும் அமைக்க உதவினர். முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைய ம.நடராசன் தான் காரணம். அவருக்கு நமது மொழி, பண்பாடு, இசை வளர வேண்டும் என்பதில் மிகுந்த ஈடுபாடு உண்டு. இது போன்ற அறக்கட்டளை இங்கு மட்டும் அல்ல, மற்ற பல்கலைக்கழகங்களிலும் ஏற்படுத்த வேண்டும்.

மறைமலை அடிகள்

தமிழ்ப்பல்கலைக்கழகம் உலகம்முழுவதும் வாழும் தமிழர்களின் விருப்பப்படி உலக பல்கலைக்கழகமாக திகழ வேண்டும். 1981-ம் ஆண்டு உலகத்தமிழ் மாநாடு நடந்த போது எம்.ஜி.ஆர். இந்த திட்டத்தை கொண்டு வந்தார். அதன்படி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு சொந்தமாக இந்த பல்கலைக்கழகம் திகழ வேண்டும். அப்போது தான் எம்.ஜி.ஆர். கண்ட கனவு நனவாகும்.

வடமொழி கலப்பால் தமிழ்மொழி தேய்ந்து வந்ததால் தனித்தமிழ் இயக்கத்தை மறைமலைஅடிகள் தோற்றுவித்தார். அதைத்தொடர்ந்து ஒரு நூற்றாண்டாக எண்ணற்ற தமிழ் அறிஞர்கள் வடமொழி என்ற முதலை வாயில் இருந்து தமிழை மீட்க போராடினர். தமிழுக்காக பல்வேறு இயக்கங்கள் தோன்றியதற்கு மறைமலை அடிகள் தான் காரணம். மறைமலை அடிகள் இந்த முயற்சி மேற்கொள்ளாமல் இருந்து இருந்தால் தமிழ் முற்றிலும் அழிந்து இருக்கும். அவரது இடைவிடாத முயற்சியால் வடமொழி அல்லாமல் தூய தமிழ் உருவானது.

கண்டுபிடிக்க வேண்டும்

ஆனால் 40 ஆண்டுகளாக வேறொரு கொடுமை நடக்கிறது. அதாவது ஆங்கிலம் கலந்து பேசும் போக்கு நிலவுகிறது. ஆங்கிலம் என்ற திமிங்கலத்தின் வாயில் தமிழை திணித்துக்கொண்டு இருக்கிறோம். இந்த போக்கில் இருந்து தமிழை மீட்கும் நடவடிக்கையை தமிழ்ப்பல்கலைக்கழகம் கண்டுபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் பல்கலைக்கழக பதிவாளர் முத்துக்குமார், இலக்கியத்துறை தலைவர் திலகவதி, தமிழ்ப்பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் சுந்தரமூர்த்தி, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் மாணிக்கம், சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் மணிகண்டன், ஸ்டெல்டா மேரீஸ் கல்லூரி பேராசிரியர் உலகநாயகிபழனி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் நடராசன், சூலூர் பாவேந்தர் பேரவை கவுதமன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் பேராசிரியர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை பேராசிரியர் சுதாகர்வடிவேலு தொகுத்து வழங்கினார்.

பழ.நெடுமாறன் பேட்டி

பின்னர் பழ.நெடுமாறன் நிருபர்களிடம் கூறியதாவது:-

1 முதல் 5-ம் வகுப்பு வரை தமிழ்வழி கல்வியை அரசு கட்டாயமாக்க வேண்டும். ஆங்கில வழி கல்வி கூடாது. உயர் கல்வியிலும் தமிழ்வழி கல்வி தான் இருக்க வேண்டும். ஆங்கில வழி கல்வியால் தமிழ் தெரியாமலும், ஆங்கிலம் தெரியாமலும் உள்ளனர். ஜல்லிக்கட்டுக்காக நிறைவேற்றப்பட்ட சட்டம் சரியானது. உச்சநீதிமன்றத்திற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் சென்றாலும் அவர்களால் வெல்ல முடியாது. மாணவர்கள் போராட்டம் 1 வாரம் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நடந்தது. அந்த போராட்டத்திற்கு ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.

அப்படி இருந்தும் இந்த போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்தனர் என்றால் போலீஸ்துறையும், அவர்களின் கவனக்குறைவும் தான் காரணம். போலீசார் அவர்களை நுழைய விடாமல் தடுத்து இருக்க வேண்டும். போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க வேண்டும். நடுக்குப்பத்தில் தாக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி, இழப்பீடு அரசு வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் தன் எழுச்சியாக போராட்டம் நடத்தி மாபெரும் வெற்றி கண்டு உள்ளனர். இந்த வெற்றி மாணவர்களையே சாரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story