கோவில்பட்டி அருகே கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்


கோவில்பட்டி அருகே கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Jan 2017 11:00 PM GMT (Updated: 30 Jan 2017 7:09 PM GMT)

கோவில்பட்டி அருகில் உள்ள வானரமுட்டி பகுதி கிராமங்களை புதிதாக அமையவுள்ள கயத்தாறு தாலுகாவில் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி,

புதிய தாலுகா

தூத்துக்குடி மாவட்டத்தில், கோவில்பட்டி தாலுகாவை 2 ஆக பிரித்து கயத்தாறை தலைமை இடமாக கொண்டு புதிய தாலுகா அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய தாலுகாவை உருவாக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

புதிதாக அமையவுள்ள கயத்தாறு தாலுகாவுடன் வானரமுட்டி மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள கிராமங்களை இணைக்க கூடாது என்றும், கோவில்பட்டியிலேயே இந்த கிராமங்கள் தொடர்ந்து நீட்டிக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

இந்த கோரிக்கையை வலியுறுத்தி இக்கிராம மக்கள், தொடர்ந்து பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலையில் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி வானரமுட்டி மெயின் ரோட்டில் அப்பகுதி மக்கள் குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மகேந்திரன் என்பவர் தலைமை தாங்கினார்.

போராட்டம் தொடரும்

அப்போது கிராம மக்கள் கூறுகையில் கோவில்பட்டியில் இருந்து வானரமுட்டி 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆனால் வானரமுட்டியில் இருந்து கயத்தாறு 30 கி.மீ. தொலைவில் உள்ளது. மேலும் அங்கு செல்வதற்கு 2 பஸ்கள் மாறிச் செல்ல வேண்டும். எனவே பொதுமக்கள் பல்வேறு அத்தியாவசிய தேவைகளுக்காக தாலுகா அலுவலகத்துக்கு செல்வதற்கு வீண் அலைச்சல், போக்குவரத்து செலவு, கால விரயம் ஏற்படும்.

எனவே வானரமுட்டி பகுதி கிராமங்கள் தொடர்ந்து கோவில்பட்டி தாலுகாவில் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான உறுதியான அறிவிப்பு வெளிவரும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணிநேரம் ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story