வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. தலைமையில் மின்துறை தலைமை அலுவலகம் முற்றுகை


வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. தலைமையில் மின்துறை தலைமை அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 30 Jan 2017 10:55 PM GMT (Updated: 30 Jan 2017 10:55 PM GMT)

வெங்கட்டாநகர் துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்கக்கோரி வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. தலைமையில் மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.

மின்சாரம் வினியோகம்

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதிக்கு மரப்பாலம் துணை மின் நிலையத்தில் இருந்து தற்போது மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. மின்சாரத்தை கொண்டு செல்லும் மின்மாற்றிகள் 30 ஆண்டுகள் பழமையானது என்பதால் பழுதடைந்து விடுவதால் அந்த பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

எனவே முத்தியால்பேட்டை பகுதிக்கு வெங்கட்டாநகர் துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்க வேண்டும் என்று வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ.வும், அந்த பகுதி மக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்று மின்வினியோகத்தை மாற்றித் தருவதமாக முதல்–அமைச்சர் நாராயணசாமி உறுதி அளித்து இருந்தார்.

முற்றுகைப் போராட்டம்

ஆனால் இதுவரை அதற்கான பூர்வாங்க பணிகள் கூட நடைபெறவில்லை. இந்தநிலையில் முத்தியால்பேட்டை பகுதிக்கு வழங்கப்படும் மின்வினியோகத்தை வெங்கட்டாநகர் துணை மின்நிலையத்தில் இருந்து தர வேண்டும் என்று கோரி வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. தலைமையில் சோனாம்பாளையத்தில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்தை அந்த பகுதி மக்கள் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் மின்துறை தலைமை அலுவலக நுழைவாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

இது பற்றிய தகவல் அறிந்து மின்துறை செயற்பொறியாளர் ரவி, அங்கு சென்று போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், அடுத்த வாரம் பரிட்சார்த்த அடிப்படையில் மின்சாரத்தை மாற்றி வினியோகிக்க உள்ளோம். அது வெற்றி பெறுமானால் ஓரிரு வாரத்திற்குள் முத்தியால்பேட்டை பகுதிக்கு வெங்கட்டாநகர் துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகத்தை மாற்றித் தருவதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story